பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ஒரு கோட்டுக்கு வெளியே ...


பொறுங்க. இல்லன்னா ஊர்க்காரன பொட்டப்பயலுவன்னு சொன்னதும் பத்தாம. பறப்பயலுக்கு வாழப் பழத்தக் குடுத்து நம்ம மானத்த வாங்குனவா இன்னும் என்னவெல்லாமோ செய்வா! செறுக்கிமவா கையில காலுல விழுறது வரைக்கும் பல்லக் கடிச்சிக்கங்க! என் மனசுகூடத்தான் இளகுது எளகிட்டா எப்டி? ஊருன்னா நாளக்கி ஒரு பயம் வராண்டாமா? என்ன நான் சொல்றது, செட்டியார?”

“சரியாச் சொன்னிக. அவள் நம்ம கால்ல விழுறது வரைக்கும் நாம இருதயததக் கல்லா வச்சிக்கிடணும். இல்லியா ஆசாரியார?”

“நான் நெனச்சத நீரு சொல்லிட்டிரு.”

‘நம்ம காலுல விழனும் என்ற வார்த்தை, எல்லாருக்கும் இதமாக இருந்தது. அதோடு ரெண்டு நாளைக்குக் கிழவன் கஷ்டப்பட்டாதான் அந்தக் குமரிக்குப் புத்தி வரும்!’ என்று எல்லாரும் நினைத்தார்கள்.

ஊர்க்காரர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும். நல்ல முடிவு கிடைக்கும் என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த மாயாண்டி, இறுதியில் அவர்கள் கைகழுவி விட்டதுபோல், முகங்களைத் திருப்பிக்கொண்டதைப் பார்த்ததும், மீண்டும் புலம்பினார்:

“ஒங்களத்தான். தயவு செஞ்சி என்னோட குத்தத்த மறந்துடுங்கய்யா, இந்நேரம் ஐவராசா அடச்சி முடிச்சிருப்பான். ஒரு நட வந்து சொல்லிட்டு வந்துடுங்க. இந்தக் கெழவன் பேசுறது கேக்கலியாய்யா? ஒங்களத்தான் மவராசாமாரே.”

பொறுமைக்குப் பெயர் போகாத பலவேச நாடாரால் பொறுக்க முடியவில்லை; அதட்டிப் பேசினார்:

“என்ன மாயாண்டி நாடாரே? ஒரேயடியாய் குழுவஞ்சி போடுறிரு. வயசுப் பெண்ண ஒம்மால அடக்க முடியல. பட்டப் பகல்ல பப்ளிக்கா பறப்பய மவனுக்குப் பழம் கொடுக்கா அதத் தடுக்க ஒம்மால முடியல! கண்கெட்ட பிறவு சூரிய நமஸ்காரம் பண்ணுனா எப்டி?”

“பழயத மறந்துடும், பலவேசம். ஒன்கூடப் பொறக்காத அண்ணன் மாதிரி என்ன நினைச்சி ஒரு நட வா. ராசா மாரிமுத்து உன்னையுந்தாப்பா. சின்னப் பயமவா சின்னத்தனமா பேசுனத நீ பெரிய மனுஷன் பெருந்தன்மயா விட்டுடுடா! வாப்பா, வந்து ஐவராசாகிட்டச் சொல்லு ராசா. ஒன்ன இடுப்பில எடுத்தவன்டா நான்.