பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

ஒரு கோட்டுக்கு வெளியே ...


கட்டிக்கொண்டு. தன் பாதங்களின் பெருவிரல்களை மட்டுமே பார்த்துக்கொண்டு. வீட்டுக்குள் சென்றார்.

அவரையே பார்த்துக்கொண்டிருந்த ஐவராஜாவிற்கு, மனம் கேட்டதோ இல்லையோ, அதில் பயம் கேட்டது. உண்மையிலேயே அவர் நடுங்கி விட்டார். தோட்டச் சுவரில் ஒரு பாதி அடைக்கப்பட்டிருந்தது. சன்னமான கம்பி வலையால் பின்னப்பட்டு, இடையிடையே பெரிய முட்கம்பிகளால் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கம்பிவலை, மடிப்புக் கலைந்து காற்றில் ஆடியது. கம்பி வலையோடு சேர்த்து. பனையோலைகள் திணிக்கப்படாமல், சுவரிலேயே கிடந்தன. நாலைந்து மூங்கில் கழிகள் வேறு.

ஐவராஜா பயந்துவிட்டார். போட்டதைப் போட்டபடி விட்டுவிட்டு. அரிவாளையும், மண்வெட்டியையும் மட்டும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்.

அந்தக் கம்பி வலை, காற்றினால் லேசாக ஆடி, பிறகு பிரிந்து, பாடை மாதிரி விரிந்தது.

20. ‘பாவி’ இறந்திட...

யக்காட்டில், நீலப்பச்சை நிறத்தில் நின்ற நெற்பயிர்கள். இப்போது பஞ்சலோக நிறத்தில், லேசாகப் பழுத்தும், சிவந்தும் போயிருந்த கதிர் வயிற்றில், நெல் கருக்களைச் சுமந்துகொண்டு, பிரசவ வேதனையில் துடிப்பவைபோல ஆடின. கர்ப்பிணிப் பெண்களுக்குக் கண்டதைத்தின்ன ஆசை என்பதுபோல், ஆணென்று இல்லாமல் அத்தனையும் பெண்ணென்ற விதத்தில், சூல்கொண்ட நெற்பயிர்களுக்கும், இதரபெண்களைப் போல, உலகம்மையும், இடதுகையில் வைத்திருந்த ஒலைப்பெட்டியிலிருந்து, உரத்தை எடுத்துத் தூவிக்கொண்டிருந்தாள்.

அவளை ஜாடையாகப் பார்த்துக்கொண்டே ஒருத்தி, “நம்ம லோகு அடுத்தமாசம் வாரானாம். மெட்ராஸ்ல கல்யாணமாம்! பெரிய பணக்காரங்களாம். கார் இருக்காம். வீடு இருக்காம். பொண்ணும் படிச்சிருக்காம். முப்பதாயிரம் ருவாய் ரொக்கமாக் குடுக்காவளாம். சங்கர மாமாவுக்கு அடிக்கிது யோகம்” என்றாள்.

மற்றப் பெண்களும், உலகம்மையை ஜாடையாகப் பார்த்தார்கள். குட்டாம்பட்டி சங்கதிகள், இப்போது அவர்களுக்கு அத்துபடி.