பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடை விரிந்திட...

171


வெட்கப்படுபவர்போல் ஓடினார். ஒரே நாளில் மொத்தமாக ஓடிவிட்டு, உடம்பைவிட்டு ஒடப் போகிறவர்போல் ஓடினார். தோட்டச்சுவரில், அனாவசியமாக ஏறி, அலட்சியமாகக் குதித்தார். ஐவராசாவையே, வெறி பிடித்தவர்போல், சூன்யமாகப் பார்த்தார். அந்தச் சூனியத்தின் சூடு தாங்கமுடியாத வேலிக்காரர் “என்ன மாமா யாரும் வாராங்களா?” என்று கேட்டார். அவருக்கும், ஆள் தேவையாக இருந்தது.

மாயாண்டி குரலில் இப்போது கெஞ்சல் இல்லை. கேவல் இல்லை. பிசிறு இல்லை. பிலாக்கணம் இல்லை. அவர் குரல் கம்பீரமாக ஒலித்தது. ஆலயமணியைப்போல முழங்கியது:

“ஐவராசா, தோட்டத்த அடைக்கறதும் அடைக்காததும் உன்னோட இஷ்டம். நான் ஒண்ணும் ஒன்கிட்டப் பிச்சை கேக்கல! நீ அடச்சாலுஞ் சரிதான். அடைக்காட்டியும் சரிதான் ஒனக்கு நீயே குழிவெட்டிக்கிட்டா நான் என்ன பண்ண முடியும் அவனவன் கர்மவினய அவனவன் அனுபவிச்சித்தான் ஆவணும் நான் உள்ள போறேன்.”

மாயாண்டி வீட்டுக்குள் போனார். பிறகு, ஒரு நிமிடத்தில் திரும்ப ஐவராசாவின் அருகில் வந்தார்.

“ஐவராசா ஒரே ஒரு உதவி. அதுவும் முடிஞ்சா, இஷ்டமிருந்தா செய்யி என் மவள் இன்னுங்கொஞ்ச நேரத்துல வந்துடுவா. அவள உள்ள அனுப்பிட்டு அப்புறமா நல்லா அடச்சிக்க அதுவரைக்கும் உன்னால பொறுக்க முடியாதுன்னா, அடச்சிடு வெளில நிக்கப்போற என் மவாகிட்ட மட்டும், “அவசரப்பட்டு ஒண்னும் பண்ணாண்டாமாம். காளியாத்தா வாசல்ல போயிப் பழியாய்க் கிடக்கணுமாமுன்னு” நான் சொன்னேன்னு மட்டும் சொல்லிடு வாரேன், ஐவராசா. ஐவராசான்னா அர்த்தம் தெரியுமாடா தர்மத்துக்குக் கட்டுப்பட்டு வனவாசம்போன பஞ்சபாண்டவங்கன்னு அர்த்தம் தர்மத்துக்குக் கட்டுப்பட்ட கெழவன் வீட்ட வனமா ஆக்கிவைன்னு அர்த்தமில்ல. மாமாவால நிக்க முடியல. வேல செய்யுற ஒனக்குப் பேச்சுத்துணை கொடுக்க முடியல! வரட்டுமா?

“நான் போறேன் ஐவராசா. உலகம்மகிட்ட மறக்காமச் சொல்லிடு. சரிசரி உன் வேலயப்பாரு.”

மாயாண்டி, கம்பீரமாக, சிங்கத்தைப்போல் பார்த்துக்கொண்டு. அடிமேல் அடிவைத்து, நூலிழை பிறழாத இடைவெளியுடன், நிர்மலத்துடனும், நிர்க்குணத்துடனும், முன்னாலும் பார்க்காமல், பின்னாலும் பார்க்காமல், கைகளிரண்டையும் முதுகுக்குப் பின்னால்