பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

ஒரு கோட்டுக்கு வெளியே ...


கிடந்தார். மிரண்டு நிற்கும் கண்கள், மிரட்டுவதுபோல் காட்சியளிக்க, அவர், அந்த நார்க்கட்டிலில் மல்லாந்து கிடந்தார்.

உலகம்மை, அய்யாவையே பார்த்துக்கொண்டு நின்றாள். சிறிது நேரப் பிரமைக்குப் பிறகு “நான் திட்டுவேன்னு பயந்துபோயி செத்துட்டீரா? அய்யா, ஒம்ம மவள பாருமய்யா! பாக்க மாட்டிரா? அய்யா, என்னப் பெத்த அய்யா, கோழி மிதிச்சிக் குஞ்சு சாவாதுன்னா குஞ்சி மிதிச்சிக் கோழி சாவுமாய்யா? என் அய்யா, என்னப் பெத்த அய்யா?” என்று ஆவேசத்துடன் சொல்லிவிட்டு, அவர் காலில் தலையை வைத்துத் தேய்த்தாள். நார்க்கட்டிலில் தலையை மோதினாள். அய்யாவின் மார்பில் புரண்டாள். நெற்றியை அழுத்தினாள். உலகமே இறந்து விட்டது போலவும். அவள் மட்டும் தன்னந்தனியாக இருப்பதுபோலவும் தோன்றியது. பயிர் பச்சைகள் எல்லாம் பட்டுப்போய், வீடுகள் எல்லாம் இடிந்து, மலை, மலையோடு மோதி. கடல், கடலோடு மோதி பூமியெல்லாம் பொடிப்பொடியாய் ஆனது போல் தோன்றியது. பூமி பிளந்து, வானம் வெடித்து, அதில் விழுந்தது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. ஆறு வயதுக் குழந்தையாகவும். அறுபது வயதுப் பாட்டியாகவும், தன்னைத்தானே மாற்றிக்கொண்டு, அவள் அய்யாவைப் பார்த்தாள். “நான் இவ்வளவு தங்காரப் புள்ளியா இன்னும் சாவாம இருக்கனே” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். அந்த வீட்டோடு அவளும், அவள் அய்யாவும். கண்ணுக்கெட்டாத உயரத்தில், மனதுக்கு எட்டாத வேகத்தில், மனிதர்க்கெட்டாத தூரத்தில் பறப்பதுபோல நினைத்தாள். அந்த அறைக்குள். அவள் அம்மாவும் வந்து அவளை இடுப்பில் வைத்துக்கொண்டு, அய்யாவின் தோளில் தலையைச் சாய்த்துக்கொள்ள அந்த மூவரும், பூமியை, பந்தை உதைப்பது மாதிரி உதைத்துத் தள்ளிவிட்டு, உயரே போய்க்கொண்டிருப்பது போல், தோன்றியது. மனிதர்கள் தள்ளி வைக்க முடியாத பெருவெளிக்குள் – கனபரிமாணம் காண முடியாத பரவெளிக்குள் – வேலிபோட முடியாத வெற்றிடத்திற்குள் – வெற்றிடத்தையும் நிரப்பும் பரம்பொருளுக்குள், அவர்கள் போய்க்கொண்டிருப்பதாக நினைத்தாள். பிறகு புத்தி பேதலித்து விட்டதோ என்று, சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டாள். ‘அய்யா செத்துத்தான் போயிட்டாரா என்று தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதத்தில், அந்தப் பிணத்தை ஆட்டிப் பார்த்தாள். இப்போதும், அது அவள் இழுத்த இழுப்பிற்கு வந்து கொண்டிருந்தது.

‘அய்யா, எப்டி எப்டியெல்லாம் கெஞ்சியிருப்பாரோ?’ என்று நினைத்துப் பார்த்தாள். அப்படி அவர் கெஞ்சியது தனக்காகத்தான்