பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

ஒரு கோட்டுக்கு வெளியே ...



ஏற்படுறதுக்கு ஒரு தாயாய் மாறிட்ட. உண்மையிலேயே நீ... என் தாயைவிட.. என் தாயைவிட..."

அருணாசலத்தால் மேற்கொண்டு பேச முடியவில்லை. குரல் தழுதழுத்தது. கண்ணீர்கூட வரும்போல் தோன்றியது. அவன் உணர்ச்சி வயப்பட்டதைப் பார்த்ததும், உலகம்மையாலும் பேச முடியவில்லை. அங்கு, மௌனமே மோனமாகி, அந்த மோனமே, மானசீகமாகப் பேசிக்கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகுதான், அருணாசலம், தன்னைப் புகழ்ந்தது அவளுக்கு முழுமையாகத் தெரிந்தது. லேசாகக் கூச்சப்பட்டாள்.

அருணாசலம் தலைதெறிக்க வெளியே ஓடினான்.

அன்றே, சற்று மேடான ஒரு இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு. குடிசை போடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. இரண்டடி ஆழத்திற்கு வாணம் தோண்டப்பட்டு, இரண்டு மூன்று நாட்களில், கல்லாலும் மண்ணாலும், ஆளுயரச் சுவர் எழுப்பப் பட்டது. பெண்களும், ஆண்களும், குழந்தைகளுமாகப் போட்டி போட்டுக்கொண்டு வேலையில் இறங்கினார்கள். வயற்காட்டிற்குப் போக வேண்டிய 'கூலிக்காரிகள்' கூட, ஒரு நாள் சிரமதானம் செய்தார்கள். பனங்கம்புகள் சுவரில் ஏற்றப்பட்டு, அவை பனை யோலைகளால் வேயப்பட்டு விட்டன.

நான்கைந்து நாட்களில், சேரி மக்களின் உழைப்பு 'ஹவு ஸாகவும்', அவர்களின் நேசம் 'ஹோம்' ஆகவும் மாறிவிட்டது!

வெள்ளிக்கிழமையில் நல்ல நேரத்தில், குடிசையில் 'பால் காய்ச்சப்பட்டது'. அதிகாலையிலேயே அய்யாவின் சமாதிக்குப் போய் இரண்டு மூன்று தங்கரளிப் பூக்களை வைத்துவிட்டு வந்த உலகம்மை, சேரி மக்களின் அன்பு வெள்ளத்தில் திக்குமுக் காடினாள். குடிசைக்கு இருபுறத்திலும், வாழை நடப்பட்டு. உள்ளூர் மேளம், நாதஸ்வரத்தோடு, ஊருக்குக் கேட்கும்படியாக ஒலித்தது. அருணாசலத்தின் வீட்டிலிருந்து ஒரு குத்துவிளக்கு