பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"மேல்ஜாதியில் பிறந்துட்டு ஹரிஜனங்களோடு போயி இருக்கது நல்லா இருக்குமா? நீ மேல்ஜாதிப் பொண்ணுங்றத மறந்துட்டியே! நியாயமா?"

"இப்படிப் பேச ஒமக்கு எப்படி மனம் வந்தது? வார்த்தைக்கு வார்த்த 'பனையேறிப்பய. பனையேறிப்பயன்னு' பனையேறிங் கள, அவங்களோட பெரியய்யா மக்களே ஒதுக்கி வைக்கப் பாத்தாச்சு! நானும் பனையேறி மவள் - போவ வேண்டிய இடத்துக்குத்தான் போறேன். வழியவிடும் சின்னையா!"

"ஒலகம்மா, ஒன் கோபம் நியாயந்தான். இனிமே ஒன்னக் கவனிச்சிக்க வேண்டியது சின்னய்யா பொறுப்பு. நீ இங்கேயே இரு. ஒன்மேல ஒரு தூசிகூட விழாம பாத்துக்கிட வேண்டியது என் பொறுப்பு. ஊரோட பொறுப்பு!"

"பாறாங்கல்லே விழுந்திச்சி! அப்பப் பாக்காத ஊர் ஜனங்களா இப்பப் பாக்கப்போவுது?"

"ஊர விடு. நானிருக்கேன். நான் ஜவாப்!"

"என்ன சின்னய்யா, நீரு? எனக்காவ ஒரு தடவை பேசப் போயி பலவேச நாடார்கிட்ட உதபடப்போனீரு! ஒம்மக்கூட 'கருவாடு விக்கற பயன்னு' கேவலமாப் பேசுறாங்க. ஒரு சின்னச் சண்டையிலும் ஒம்ம கருவாட்ட பிடிச்சிக்கிற மேல்ஜாதிகூட நீரு ஏன் ஒட்டிக்கிட்டு இருக்கணும்? பேசாம எங்கூட சேரிக்கு வாரும் சின்னய்யா! அங்க ஒம்ம மேல ஒரு தூசிகூட விழாம இருக்க, நான் பொறுப்பு."

நாராயணசாமியால் அவளின் கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை. முகத்தில் திடீரென்று வேர்வை பொங்கியது. ஒதுங்கிக் கொண்டார். உலகம்மை லேசாக நடக்கப் போனாள். ராமையாத் தேவர் முன்னால் வந்தார்.