பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

ஒரு கோட்டுக்கு வெளியே ...



உலகம்மையால் அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை . தலைவிரி கோலமாக ஓடினாள். ஊருக்குச் சற்று வெளியே இருந்த பிள்ளையார் கோவிலில் எந்தவித மாறுதலும் இல்லை. அந்தத் தெருவில் வசித்த பிள்ளைமார்களும், பண்டாரங்களும் "ஒங்கய்யா கோட்டுக்குள்ள இருக்காரு. மாரிமுத்து நாடார் கையகால பிடிச்சி வெளில கொண்டு வா என்று சாவகாசமாகச் சொன்னார்கள். ஆசாரித் தெருவிலும் மாறுதல் இல்லை . உதிரமாடசாமியும் அப்படியே இருந்தார்.

பள்ளிக்கூடத்தின் பக்கம் வந்தபோது, கிழக்குமேற்காக இருந்த அந்தத் தெருவில், பலசரக்குக் கடைகள் வழக்கம்போல்தான் இயங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கடைகளுக்கு எதிர் வரிசையில் இருந்த நாலைந்து டிக்கடைகளில் வழக்கம் போல் உட்கார்ந்திருப்பவர்கள் 'இப்பவும்' அப்படியே உட்கார்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு முன்னால் இருந்த மைதானத்தில் 'வாலிபால்' விளையாட்டும், 'லவ் சிக்ஸ், லவ் செவன்' என்ற வார்த்தைகளும் உருண்டோடிக் கொண்டிருந்தன. மைதானத்திற்குச் சற்றுக் கிழக்கே இருந்த பீடிக்கடையில் பெண்கள் இலைகளை வாங்கிக் கொண்டும், பீடிகளைக் கொடுத்துக் கொண்டுந்தான் இருந்தார்கள். அளவுக்கு மீறிய சிரிப்புச் சத்தங்கூடக் கேட்டது. அதைக் கடந்து அவள் வந்தபோது *வாத்தியார் வீட்டுத் திண்ணையில், நாலைந்து பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பார்த்ததும், "சீக்கிரமா போ, காளியம்மன் கோவிலுக்குப் போ" என்று ஒருவர் சொல்லிவிட்டு பின்னர் அப்படிச் சொன்னதில் எந்தப் பெரிய விஷயமும் இல்லை என்பதுபோல், மற்றவர்களோடு வேறு விஷயங்களைப் பேசத் துவங்கினார். காளியம்மன் கோவிலை அடுத்திருந்த ஊர்க்கிணற்றில்' தண்ணீர் எடுத்துக்கொண்டு தலையில் ஒரு வெண்கலப் பானையையும், இடுப்பில் குடத்தையும், வலது கையில் 'தோண்டிப் பட்டைகளையும்' வைத்துக்கொண்டு எண்கள் எந்தவித மாறுதலுமின்றிப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் மட்டும் "ஒய்யாவ கோட்டுக்குள்ள வச்சிருக்கு" என்று, "ஒய்யா சாப்பிடுகிறார்" என்று சொல்வது மாதிரி சொன்னார்கள்.

கோவிலுக்குத் தொலைவில் இருந்த ஒரு திட்டில், கருவாடு, மீன் கூறுபோடப்பட்டிருந்தன. அந்த ஊரில் விளையாத உருளைக்கிழங்கு களையும் கூட, கூடையில் வைத்துக்கொண்டு, ஒருவர் தராசில் நிறுத்துக் கொண்டிருந்தார்.