பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"சரி கம்ளெயிண்ட் எழுதிக்குடு. நாளைக்குப் பாக்கலாம்."

"இன்னிக்கு நீங்க வராட்டா அவரு அங்கேயே செத்துப் போவாரு."

"இப்ப முடியாது. நாளைக்கு மந்திரி வரார். அவனவன் நாயாய் அலைஞ்சிக்கிட்டு இருக்கோம். நீ நாளைக்கி வா."

"அய்யா அப்டிச் சொன்னா எப்டிங்க? அங்க என் அய்யா இந்நேரம் செத்துக்கூட போயிருப்பாரு. இல்லன்னா இந்த நேரத்துல மூணு மைலு நடந்து வருவேனா?"

"நீ எப்டி வந்தங்கிறது முக்கியமல்ல. இப்ப நாங்க வர முடியாதுங்றதுதான் முக்கியம்!"

"இப்டிப் பேசினா எப்படிங்க? வலியார் மெலியார வாட்டாம இருக்கத்தான இருக்கியா? மந்திரிமாருகூட இதத்தான சொல்லுதாவ?”

"ஏய். அனாவசியமா பேசாத. நாளைக்கு வான்னா வா. ஒனக்கு ஒப்பன் பெரிசு. எங்களுக்கு மந்திரி பெரிசு."

"அப்புறம் என்மேல வருத்தப்படக்கூடாதுங்க. மந்திரி எங்க ஊருக்கும் வாராரு. நான் அவருகிட்டயே சொல்லுறேன். அப்டின்னா நான் போவட்டுமா?. தண்ணி கேட்டவருக்கு அதக் குடுக்காம வந்துட்டேன்."

ஹெட்கான்ஸ்டபிள் விறைப்பாக நின்றார். கான்ஸ்டபிள் வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டார். “ஸ்டேஷன் இன்சார்ஜான' ரைட்டர் மிடுக்காகப் பேசினார். அவருக்கு ஹெட்கான்ஸ்டபிளை அதிகமாகப் பிடிக்காது.

"அந்தப் பொண்ணு சொல்றதப் பாத்தா கேஸ் சீரியஸ் போலத் தோணுது, கோட்டுக்குள்ள ஒருவர நிறுத்தி வைக்கிறது சட்டப்படி பெரிய குற்றம். ரெண்டு வருஷம் ஜெயில் போடலாம். அது அநியாயம்! ரெண்டு பேரும் போயிட்டு ஜல்தியா வந்திடுங்க."

ஹெட்கான்ஸ்டபிளும், கான்ஸ்டபிளும். இரண்டு லைட் இல்லாத சைக்கிள்களை உருட்டிக்கொண்டு. அழாக்குறையாகப் புறப்பட்டார்கள். உலகம்மை, முன்னால் வழிகாட்டிக் கொண்டிருந்தாள். ரைட்டர் தன்னைத்தானே தனக்குள்ளேயே மெச்சிக்கொண்டார். 'ஒருவேள் மந்திரிய அவள் பார்த்தாலும், அவள மந்திரி பாத்தாலும் நம்மப் பத்தி அவா சொல்லாண்டாமா? சொல்லுவா...'