பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நட்பின் ஆன்மா

அன்று அலுவலகத்தில் எனக்கு ஏகப்பட்ட வேலை. காலையில் எட்டு மணிக்கே வந்துவிட்டேன். கம்பெனி சம்பந்தமாக, அரசாங்கம் அனுப்பிய தாக்கீது ஒன்றுக்கு விளக்கம் கொடுக்கும் ட்ராஃப்டைத் தயாரிக்க வேண்டும். தனிப்பட்ட நலனுக்காக, சில விளம்பரங்களுக்கு அளவுக்கு மீறிப் பணம் கொடுத்ததாக, சில பங்குதாரர்கள் 'ஜெனரல் பாடி கூட்டத்தில் கேட்கப்போகும் கேள்விகளை நானே கற்பனை செய்து, நானே பதில் தயாரிக்க வேண்டும் என்று எம். டி. சொல்லிவிட்டார்.

போதாக் குறைக்கு, ஆடிட்காரர்கள், கண்ட கண்ட ரிஜிஸ்டர்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கம்பெனி சம்பந்தப்பட்ட முடிவுகளை மேற்கொள்ளும்போது என்னைக் கலந்தாலோசிக்காத எம். டி. இப்போது நான் சம்பந்தப்படாத விவகாரங்களுக்கு பதில் வரையும்படி சொன்னது, எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. அதை அவரிடம் காட்ட முடியாமல், மத்தியானம் என்ன குழம்பு வைக்கவேண்டும்?" என்று டெலிபோன் செய்த மனைவியிடம் 'மண்ணாங்கட்டியையும் மருதாணி இலையையும் வை' என்று கோபமாகப் பேசி, வேகமாக டெலிபோனை வைத்தேன்.

இந்தச் சூழ்நிலையில், பியூன் என் மேஜையில் வைத்துவிட்டுப் போயிருந்த விசிட்டிங் கார்டை நான் பார்க்கவில்லை. பியூன் வந்து, 'நீங்க பார்க்க முடியுமா, முடியாதா? என்று கேட்டுட்டு வரச் சொன்னார்' என்று சொல்லி, கார்டைத் தூக்கிப்பிடித்துக்

காண்பித்தபோதுதான் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. மோகன்

- என் பால்ய நண்பன், என்னைப் பார்க்க வந்திருக்கிறான். நான் நாற்காலியில் இருந்து எழுந்த அவசரத்தைப் பார்த்துப் புரிந்துகொண்ட பியூன், வெளியே போய் மோகனைக் கூட்டிக்கொண்டு வந்தான். வந்தவனை நான் அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

"வாடா மோகன்... அதிக நேரம் காத்து இருந்தியா?”

“ஏண்டா... பெர்ஸனல் மானேஜரானதும் கண்ணு தெரியலியோ? நீ... டில்லிக்கு ராஜாவானாலும் எனக்குச் சந்திரன் தாண்டா? உம்... மறந்துட்ட... "

"மறக்கலடா..."

"அப்போ... மறக்காமத்தான் காக்க வச்சியோ?”