பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நட்பின் ஆன்மா 23

லேசாகச் சிரித்தாள். அவள் சிநேகிதியோ, அவள் புருஷன்காரனுக்கு வேலை வாங்கிக் கொடுப்பது என் கடமை என்பது மாதிரி 'அசால்டாக உட்கார்ந்திருந்தாள். அவள் புருஷன் இப்போது காட்ரேஜ் பீரோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். மோகன் சந்தோஷம் தாங்காமல் சீட்டியடித்தான்.

அந்தக் கோஷ்டி, என் வீட்டுக்கு வராமலே போய் விட்டது. பதினைந்து நாள் கெடுவில், பத்து நாளிலேயே ஒரு கம்பெனியில் காலியாக இருந்த 'ஸ்டோர் கீப்பர்' வேலையை 'ரிசர்வ்' செய்துவிட்டேன். சம்பந்தப்பட்ட பெர்ஸனல் மானேஜர் சம்மதித்து விட்டதாகவும், வேலையை ஒப்புக் கொள்ளும்படியும் மோகனுக்குக் கடிதம் போட்டுவிட்டேன்.

இந்தச் சமயத்தில் மதுரைக்கு ஆபீஸ் விஷயமாகப் போக வேண்டியது இருந்தது. மோகன் வீட்டிற்குப் போனேன். தங்கச்சியிடம், அவள் சிநேகிதிக்குக் கிடைத்த புதிய வாழ்க்கையைப் பற்றித் தெரிவித்து, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அதோடு, பழைய கோபத்தையும் புதிய உதவியால் போக்கிவிடலாம்!

மோகன் வீட்டில் இல்லை. அவன் மனைவி! அழுது களைத்துப் போனவள் போல் உட்கார்ந்திருந்தாள். வாங்கண்ணா என்று சொன்னாளே தவிர சொல்லில் ஒரு உற்சாகம் இல்லை. எனக்கு ஒரளவு ஏமாற்றந்தான்; வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை.

"தங்கச்சி, கடைசியில அவனுக்கு வேலை கிடைச்சுட்டுது. இன்னும் ரெண்டு நாளையில வேலையில சேர்ந்துடலாம்... என்னம்மா, ஏன் அழுவுற? நான் கொடுத்து நீ வாங்க வேண்டியதிருக்குன்னா? எதுக்கும்மா அழுவுற?"

அவள் இரண்டு நிமிடம்வரை ஏங்கி ஏங்கி அழுதாள். பிறகு, அழுது விட்டோமே என்று அவமானப்பட்டவள் போல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். என்னை மருட்சியோடு பார்த்தாள்.

‘'எதுக்கும்மா அழுவுற?" "உங்ககிட்ட சொல்றதுக்கு என்னண்ணா. அவரு அந்தப் பொண்ணு கூட... அந்தப் பொண்ணுகூட... அவள் புருஷன் அரை லுன்ஸ்..."

எனக்கு அந்த வீடே இடிந்து என் தலையில் விழுந்தது போல் இருந்தது. எந்தப் பெண்ணையும் சொந்தச் சகோதரி போல் கருதும் மோகனுக்கா இந்த விபத்து? நான் சிறிதுநேரம் அசைவற்ற ஜடமானேன்.

"அப்படின்னா நீ ஏம்மா வேலை வாங்கிக் கொடுக்கணுமுன்னு என்கிட்ட சொன்னே? உன் முகத்துக்காகத் தான் நான்..."