பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொகுசுக்காரர்கள்

வேகமாக வந்துகொண்டிருந்த அந்தப் படகுக் கார், திடுதிப்பென்று தன் குடிசை முன்னால் நிற்பதைப் பார்த்த பொன்னாத்தாவுக்குக் கையும் ஒடவில்லை, காலும் ஒடவில்லை. அதுமட்டும் அல்லாமல், "ஏய். பொன்னாத்தா...! பொன்னாத்தா!" என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று காருக்குள் இருந்து அழைப்பதும் கேட்டது. வயிற்றுடன் அணைத்தவாறு வைத்திருந்த நான்கு வயசுப் பையனை, ஒரு சாக்கில் கிடத்தப்போனவள், அப்படிச் செய்ய மனம் இல்லாமல் பையனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு காருக்கருகே வந்தாள். முன்பக்கத்து இருக்கையில் பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவம் அமர்ந்திருந்தார்.

ஆசாமி காரின் கதவைத் திறக்காமல் அவளைப் பார்த்தார். ஆனால், அவர் அருகில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தனும், பின்னால் உட்கார்ந்திருந்த சூட், கோட், டை போட்ட இரண்டு ஆண்களும், அழகிய இளமங்கை ஒருத்தியும் காரிலிருந்து வெளியே வந்தார்கள், பரமசிவம் அசைந்து கொடுத்காததால், பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தன் டிரைவர் பக்கத்துக் கதவு வழியாக வெளியே வந்தார்.

அவர்கள் அப்படி இறங்கியதற்குச் சலுகை காட்டுவது போல், உறுப்பினர் பரமசிவம் காரின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு உட்காரப் போனார். அவரால் திறக்க முடியாமல் போகவே, டிரைவர் வந்து திறந்தார்.

ஆனாலும், காரிலிருந்து இறங்க விரும்பாதவராய், 'ஏய் பொன்னாத்தா, உனக்கு நல்ல காலம் பிறந்திட்டுது. இவங்கெல்லாம் யாருன்னு தெரியுமா?" என்று கேட்டார்.

பஞ்சாயத்துத் தலைவரைப் பார்த்தாலே பரபரப்படையும் அந்தக் குடிசைப் பகுதி மக்கள், இப்போது தலைவரையும் தலைவர்கள் போல் காட்சியளித்த இரண்டு பெரிய மனிதர்களையும், அந்தப் பெண்ணையும், பளபளப்பான அந்தக் காரையும் பார்த்ததும் எல்லாப் பையன்களும் வந்துவிட்டார்கள்.

"பொன்னாத்தா, ஒன்னைத்தான். குழந்தையை இறக்கிக் கீழே விடு' என்று பரமசிவம் சொல்லுகையில், வந்த பிரமுகர்களில் இளைஞரான ஒருவர், கோட்டுப் பைக்குள் ஒளித்து வைத்திருந்த ஸ்டெதாஸ்கோப்பை எடுத்துக்கொண்டு, பொன்னாத்தா தோளில் கிடந்த அந்தப் பையனை, பலவந்தமாகக் கீழே இறக்கப் போனார்.