பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஒரு சத்தியத்தின் அழுகை

பொன்னாத்தா, அந்தக் கார் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு கணவனை நினைத்தவள் போல் கேவிக்கேவி அழுதாள். அவளைச் சூழ்ந்திருந்த பெண்கள், "ஏம்மா அழுவுறே?" என்று ஆதரவோடு கேட்டார்கள்.

போன வருஷம் இதே மாதிரி கார்லதான் அவரு சோழாவரம் பக்கம் அடிபட்டுச் செத்தாரு."

பொன்னாத்தாவுக்கு இருபத்தெட்டு வயசிருக்கும். வறுமை, அவள் வனப்பின் வளத்தைப் பாதித்திருந்தாலும், அதை வறுமையாக்கவில்லை. படர்ந்த முகத்தில் எதையுமே அலட்டிக் கொள்ளாமல் நிதானமாகப் பார்க்கும் கண்கள். அழுத்தமான மூக்கு.

சைக்கிளில் அரிசி மூட்டையை ஏற்றிக்கொண்டு வந்த அவள் கணவனைச் சென்ற ஆண்டு ஒரு பணக்கார மனிதரின் கார் அடித்துக் கொன்றுவிட்டது. இவ்வளவுக்கும் அவன் சாலையின் ஒரத்தில்தான் சைக்கிளை ஒட்டிக்கொண்டு வந்தானாம். ஆந்திராவில் குடித்துவிட்டு வந்த அந்தக் கார்க்காரர்கள், மயக்க நிலையில் வண்டி ஒட்டி, அவள் கணவனை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்திவிட்டார்கள். வழக்குப் போட்டிருந்தால், ஆயிரக் கணக்கில் நஷ்ட ஈடு கிடைத்திருக்கும். அவள் பஞ்சாயத்து உறுப்பினர் பரமசிவ மாமாவிடம் கேட்டாள். அவரோ, புருஷன் செத்ததை விடப் பணம் கிடைக்கிலங்கற கவலைதான் பெரிசா இருக்கு போல என்று சொல்லி, தம் பொறுப்பைத் தட்டிக் கழித்தார். அரசின் சார்பில் வழக்குப் போட்டிருக்கலாம். ஆனால் வழக்குப் போட வேண்டியவர்களின் கைகளில் எதுவோ திணிக்கப்பட்டதால், அவர்கள் அந்தக் கையின் கனம் தாங்க முடியாமல், வழக்குக்காக எதையும் எழுதவில்லையாம்.

பொன்னாத்தாவுக்கு இந்தக் கிராமத்தில் எந்தவிதமான பிடிப்பும் இல்லைதான். இருந்தாலும் பிறந்த ஊருக்கு அவள் போக விரும்பவில்லை. கல்யாணம் ஆவதற்கு முன்னால் ஒரு குடும்பச் சண்டையில், நீ கல்யாணமாகி ஒரு வருவடித்துல தாலி அறுக்கலேன்னா நான் ராமக்கா இல்லே ன்னு அவள் அண்ணிக்காரி சொன்னது மாதிரியே நடந்துவிட்டதால், அவள் கண்ணில் விழிக்க இவள் விரும்பவில்லை. ஏதோ ஒருவித வைராக்கியத்தால், இந்த ஊரிலேயே தங்கிக் கூலிவேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

மாலைப் போது மலர்ந்தது.

பொன்னாத்தாவின் பையன் முக்கிக் கொண்டிருந்தான். வயிறு உப்பிப் போயிருந்தது. கண்கள் நிலை குத்தி நின்றன. அவன் மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. நாட்டு மருந்தைக் கொடுக்கலாமா, புது மனிதர்கள் கொடுத்த மருந்தைக்