பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொகுசுக்காரர்கள் 59

சரிதான்." பொன்னாத்தாவின் பயல் முனுசாமி, அந்தப் பெண்ணையே உற்றுப் பார்த்தான். தலையில் முடியில்லாமலும், இருக்கிற முடியில் எண்ணெய் இல்லாமலும் அலுத்துக் களைத்துப் போன பரட்டைத் தலைகளைப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போன அவன் கண்களுக்கு, அந்தச் சும்மாட்டுக் கொண்டையும் சிவப்புச் சாயமும் பசுமையாகத் தெரிந்தன.

அந்த அழகி, தன் கைப்பையைத் திறந்து, ஒரு கேக்கையும், நாலைந்து சாக் லெட்டுகளையும் எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு, அந்தப் பையனின் கண்களுக்கெதிரே காட்டிக் கொண்டே, பையா இது என்ன? சொல்லு, பார்க்கலாம்" என்றாள்.

பையன் முதல் முறையாகப் பேசினான். "திங்கறது. அம்மா, வாங்கித் தா அம்மா!" "சாக்லெட், கேக் என்று சொல்லாமல், அந்தப் பையன் திங்கறது. என்று சொன்னதில், அவளுக்கு ஏமாற்றமே. அதற்கு அறிகுறியாக, உதடுகளை லேசாகப் பிதுக்கிக் கொண்டே, கேக்கையும் சாக்லெட்டையும் அந்தப் பையனிடம் நீட்டப் போனவள், கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள். அதே வேகத்தில், இளைய டாக்டர் பார்த்து, அர்த்த புஷ்டியுடன் சிரித்தான். அதை அவள் புரிந்துகொள்ளவில்லை. பையனும் புரிந்து கொள்ளாமல் குடு, குடு என்று சொல்லிக்கொண்டே, வாயெல்லாம் நீராகக் கையைக் காலை ஆட்டினான்.

அவள் கொடுக்காமல், டாக்டரை எரித்து விடுபவள் போல் பார்த்தாள். அவர் பேசாமல் இருந்ததால், "டாக்டர், உங்க காமிரா எங்கே?' என்று கேட்டாள்.

டாக்டர், ஏதோ தவறு செய்துவிட்டவர் போல் துடித்துக்கொண்டே, “மன்னிக்கணும்" என்று கூறிக் கொண்டே, காரின் பின்னாலிருந்து காமிராவை எடுத்தார்.

அவள், இப்போது கேக்கையும் சாக்லெட்டையும் பையனிடம் நீட்டினாள். காமிராவில் டக் என்ற சத்தம் கேட்டபோது, பையன் அதை வாங்கிக் கொண்டான்.

டாக்டர், இரண்டு மாத்திரைகளை நீட்டி, "வெட்டு வரும்போது இதைக் கொடு" என்று சொன்னார். பொன்னாத்தா மரியாதைக்காக அதை வாங்கிக் கொண்டாள். இது முடிந்ததும், அந்த மங்கையும் மற்றவர்களும் காரின் பின் இருக்கையில் அமர, பஞ்சாயத்துத் தலைவர், உட்கார்ந்திருந்த உறுப்பினருடன் ஒட்டிக்கொள்ள, அந்தக் கார் பறந்தது. "மாலையில் வருகிறோம். யோசனை பண்ணிச் சொல்லு" என்று மங்கை சொல்லிக்கொண்டே போனாள்.