பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


(சிறு விளக்கம்)

வாழ்க்கையில் மக்கள் விரும்பிச் செய்கின்ற செயல்களே, கொஞ்சம் மெருகேறி, அவ்வப்போது பிறந்த விதிமுறைகளைக் கொண்டு விளையாட்டுக்களாக உருவாகியிருக்கின்றன.

மனித குலத்தை மகிழ்ச்சியுடன் வாழச் செய்ய மலர்ந்திருப்பவை விளையாட்டுக்களே என்று எல்லோருமே இதயபூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். விளையாடி, தங்கள் வாழ்வை செம்மைப்படுத்திக் கொண்டு முழுமையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்போரும், சான்றாக விளங்குவோரும் இன்று எண்ணிக்கையில் ஏராளமாகவே இருக்கின்றனர். எதிர்காலத்திலும் இருப்பார்கள்.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’, ‘ஒற்றுமையே வலிமையாம்’ என்று மக்களை ஒற்றுமைப்படுத்துகின்ற பாட்டும் மொழிகளும் எல்லா இலக்கியங்களிலும் ஏராளமாக உண்டு. அவற்றை செயல்படுத்தும் அற்புதக்களமாக, நிலமாக விளங்குபவை விளையாட்டுக்கள்தான்.

விளையாட்டுக்களை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள் அறிஞர்கள். ஒன்று - பெரு விளையாட்டுக்கள் (Major Games), மற்றொன்று - சிறு விளையாட்டுக்கள் (Minor Games).