பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


கூடைப்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கால்பந்தாட்டம், கிரிக்கெட், பூப்பந்தாட்டம், மென்பந்தாட்டம் போன்ற ஆட்டங்களையெல்லாம் பெரு ஆட்டங்கள் என்று கூறுகின்றார்கள்.

முதன்மை நிலை பெற்றிருக்கும் பெரு ஆட்டங்களைப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட அளவு ஆடுகளம், வரையறுக்கப்பட்ட ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை, நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஆட்ட நேரம், குறிப்பிட்ட செயல்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள், எல்லாவற்றிலும் கட்டிக் காக்கும் அமைப்புள்ளவற்றையே பெரு விளையாட்டுக்களில் நம்மால் காண முடிகிறது.

ஆனால் சிறு விளையாட்டுக்கள் அப்படி அல்ல, இருக்கின்ற இடத்தையே போதுமான அளவுள்ள ஆடுகளமாகப் பயன்படுத்தலாம். வந்திருக்கின்ற ஆட்டக்காரர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டு ஆடலாம். தேவையானால் ஆடும் நேரத்தை சுருக்கியோ விரிவுபடுத்தியோ ஆடச் செய்யலாம். ஆட்ட விதிகளை ஆட்டக்காரர்களுக்கென்று விரும்பியவாறு மாற்றி வைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் பண்ணலாம்.

அதனால், சிறு விளையாட்டுக்கள் எல்லாம், எண்ணிக்கையில் வரம்பு கடந்த ஆட்டக்காரர்களின் ஆர்வத்திற்கு இரைபோட்டு, இனிய உணர்வுகளை ஏற்றி வைத்து, இன்பமயமான சூழ்நிலையில் உலவச் செய்திட உதவும் உயர்ந்த ஆட்டங்களாகவே உலகிலே உலா வருகின்றன.

‘எங்கும் விளையாடலாம், எப்பொழுதும் விளையாடலாம், எல்லோரும் கூடி விளையாடலாம்’ என்ற உயர்ந்த தன்மைகளில், காலங்காலமாக வாழ்ந்து வந்த நமது