பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

11


முன்னோர்களின் அறிவிலும் அனுபவத்திலும் தோன்றி செழித்து வந்தவைகளே சிறு விளையாட்டுக்களாகும்.

சுவையான பொழுதுபோக்கு; சுகம் நிறைந்த உடல் வளர்ச்சி; கூறும் விதிகளுக்குக் கீழ்ப்பணிதல்; ஆட்ட நேரம் முழுவதிலும் அமைதி காத்தல்; எல்லோரையும் மதித்து நடக்கும் இனிய பண்பாடு; குழுவுடன் கூடி விளையாடும் ஒற்றுமை; எந்த நேரத்திலும் செயல்படுத்துவதற்குத் தயாராக விளங்கும் சுறுசுறுப்பான தயார் நிலை; முன்னறிவுடன் எதையும் எதிர்பார்த்து அதற்கேற்ப செயல்படும் அறிவு நிலை 'நான்' என்பதை மறந்து 'நாம்' என்று பெறும் உணர்வு கொண்ட குழுப்பற்று; உண்மையாகவே தன் குழுவிற்குத் தியாகம் செய்யும் உணர்வு; பொறுப்புணர்ந்து நடக்கும் பண்பு; நல்லதைக் காக்க மேற்கொள்ளும் வீரம், விவேகம்; பிறர் செய்யும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பொறுமை; அவர்கள் தவறை மன்னிக்கும் மனப்பக்குவம்; பெருந்தன்மை.

மேலே கூறிய அற்புத குணங்களை அருமையாக வளர்த்து விடுகின்ற நோக்கத்திற்காகவே சிறு விளையாட்டுக்கள் தோன்றியிருக்கின்றன.

சிறந்த ஆட்டக்காரர்கள் என்பவர்கள் ‘விளையாட்டில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்’ என்பதினால் மட்டும் ஆகிவிடுவதில்லை. அவர்கள் எவ்வளவு தூரம் ஆட்டத்தில் லயித்துப் போயிருந்தார்கள், எத்தனை அளவு சிறப்பாக ஆடினார்கள், எவ்வளவு தூரம் ஆனந்தம் அடைந்தார்கள் என்பதில்தான் அடங்கியிருக்கிறது.

விளையாட்டை முதலில் விரும்பிக் கற்றுக் கொள்ள வேண்டும். விளையாட்டை விளையாட்டுக்கென்றே, விளையாட வேண்டும். அதில்தான் உண்மையான இன்பம் அடங்கிக் கிடக்கிறது.