பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

வாக்கியங்களின் முப்பத்திரெண்டு உட்பொருள் நுட்பங்களையும் புத்த சமயக்கோட்பாடுகளின் வழி அயோத்திதாசர் நிரல்படுத்துவார். பிறவுயிர்களுக்குத் துன்பம் செய்தல், பிறர் பொருளைக் கவர்தல், பிறர்க்குத் தீங்கு நினைத்தல், பிறன்மனை நயத்தல், பிற சீவன்களைக் கொல்லுதல், பிறர் மனம் புண்படப் பேசல், பிறரை வஞ்சித்து வருந்தச் செய்தல், பிறரை மதுவூட்டி மயங்கச் செய்தல் ஆகிய எட்டும் பாவச் செயல்களாம்.

பிறவுயிர்களுக்கு உண்டாகும் துன்பங்களை நீக்கி ஆதரித்தல், பிறர்க்கு இல்லாத பொருள் ஈந்து சீர் பெறச் செய்தல், பிறரைத் தன்னவர் போல் நேசித்தல், பிறர் மனைவியரைத் தாய் தங்கையர் போல் பாதுகாத்தல், பிற பிராணிகளைக் கொலைக்கேவாமலும் கொலை செய்யாமலும் இருத்தல், பிறர் உள்ளமும் உடலும் மகிழும் இன்சொல் பேசுதல், பிறர்க்குப் பயன்படும் சொற்களைப் பேசி அவர் வளம்பெறச் செய்தல், பிறரின் அறிவைப் பெருக்கி அமுதுண்ணச் செய்தல் ஆகிய எட்டும் நன்மைகளாம்.

சினவாதிருத்தல், தன்னிடத்திலுண்டாம் காமத்தை அகற்றி அன்பைப் பெருக்கல், தன்னிடத்திலுண்டாம் மயக்கங்களை அகற்றி அறிவை வளரச் செய்தல், வஞ்சினம் பொறாமைகளை அகற்றி நல்வாழ்வை விரும்பல், தன்னிடத்திலுண்டாம் பொய்ப் பொருளாசையை அகற்றி மெய்ப் பொருள் தேடுதல், தன்னிடத்திலுண்டாம் சிற்றின்பச் செயல்களை அகற்றிப் பேரின்பத்தை நாடல், தன்னிடத்திலுண்டாம் தற்பெருமையை அகற்றி அடக்கத்தில் நிற்றல், தன்னை வஞ்சித்துத் துன்பப்படுத்தியவனை அன்புடன் ஆதரித்தல் ஆகிய எட்டும் இதய சுத்தங்களாம்.

தன்னிடத்துண்டாம் பற்றுகளற்று ஆனந்தத்திலிருத்தல், தன்னை மாறி மாறிப் பிறக்கச் செய்யும் மரணத்தை வெல்லுதல், எப்பொழுதும் தன்னைத் துயரத்தில் ஆழ்த்தும் காமவெகுளி மயக்கங்களை அறுத்தல், தானே தோன்றுகிறதும் கெடுகிறதுமாகிய மனத்தைத் தோன்றாமலும் கெடாமலும் நிறுத்தல், தனக்குண்டாகும் பிறப்பச்சம், இறப்பச்சம் நீக்கிக் கலங்காதிருத்தல், தன்னுள் தானாய் விளங்கும் உண்மையான பேரின்பம் அடைதல், தானே சுயம்பிரகாச சதாநித்திய சித்தாம் ஆனந்த நிலையடைதல் ஆகிய எட்டும் வீடுபேறாம் நிருவாணமாகும்.

அவலோகிதரால் அக்கை, தங்கையர் போலாக்கிய வடமொழி, தென்மொழி இரண்டின் ஆதரவால் திரிபேத வாக்கியங்களாகும் முதல் நூலை ஆதி நூல், எழுதாக் கேள்வி, ஆரணம், ஒத்து, சாகை, சுருதி, இருக்கு என்னும் ஏழு பேதமாக வழங்கி வந்தார்களென்பதற்கு ஆதாரமாகப் பனம்பாரனார் கூற்றையும், நன்னூல், சீவகசிந்தாமணி, சூளாமணி அடிகளையும் மேற்கோள் காட்டுவார் அயோத்திதாசர்.