பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 21

மனத்தினால் அறியத் தக்கவனாகவும் இருக்கின்றான் என்றும் வேறோரிடத்தில் விவேக பரிபூரணனும் சர்வக்ஞனும் எங்கும் பரவி மகிமையுள்ளவனுமாகிய ஆத்மா ஆகாயத்திலிருக்கிறானென்றும் மூன்று வெவ்வேறு உறுதிமொழிகளை அளிக்கும். சுவே தாசுவதர உபநிஷதம் ஓரிடத்தில் தியானத்தையும் யோகத்தையும் மேற்கொண்டோர் காலாத்துமாக்களோடமைந்த வேதாத்துவ சக்தியைக் கண்டார்களென்றும் இன்னோரிடத்தில் புருஷன் அந்தராத்மாவாகி விரலளவுள்ள மக்களின் இதயத்தில் இருக்கிறானென்றும் இயம்பும் (சிந்தனைகள் I 66-78).

இவற்றையெல்லாம் தொகுத்துத் தரும் பண்டிதர் வேதங்களும் உபநிஷதங்களும் பிரமத்தின் நிலையையும் ஆத்தும நிலையையும் ஆதாரமின்றிப் பிள்ளைகள் விளையாட்டில் கண்ணைக் கட்டியடிக்க ஆள் தெரியாது தடவி அவ்விடம் உள்ளவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லித் திரிவது போல் மாறுபடப் பேசுவதால் வேத அந்தங்களை வாசிப்பது விழலுக்கிறைத்த நீராய் முடியுமென்பார்.

இவ்வாறு வேதங்களும் உபநிஷதங்களும் கடவுள் பற்றியும் ஆன்மா பற்றியும், மறுமை பற்றியும் பொருளற்ற பிதற்றல்களைக் கொண்டு “பைத்தியக்காரனின் பாட்டுகளாக” அமைந்து மனித வாழ்வுக்குரிய நெறியைச் சொல்லாதிருக்கப் புத்தரது ஆதிவேதம் மனிதரால் அறிய முடியாதது பற்றி வீண் ஆரவாரச் சொற்களில் கதை சொல்ல முயலாது. இவ்வுலக வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நெறிகளைச் சொல்லியிருப்பதை ஒப்பிட்டுக் காட்டுவார் பண்டிதர்.

இந்து சமயத்தார் குறிப்பிடும் கீதையைக் கண்டு கொள்ளாது பெளத்த ஞானிகள் கூறியுள்ள மூன்று அறவுரைகளை மூன்று கீதைகள் என்றும் மும்மணிகள் என்றும் மூன்று இரத்தினங்கள் என்றும் அறிமுகப்படுத்துவார் அயோத்திதாசர்.

மனுக்களில் பெருமையும் அருமையுமான ஆசானும் பகவான் சாக்கைய முனிவர் யாவருக்கும் குருவாக விளங்கி உலகில் முடிக்க வேண்டியதை முடித்துக் கரையேறி நிருவாணம் அடைந்த மங்களகரமான புத்தபிரானை யாங்கள் துணைக் கொள்கிறோம்.


காமம், அவா, துக்கம் இவைகளினின்றும் விலகச் செய்யும் தர்மமும் அழியாத தருமமும் குற்றமற்றதும் மதுரமானதும் தெளிவானதும் தருக்க நீதியானதுமான தர்மத்தை யாங்கள் துணைக் கொள்கிறோம்.