பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

மயக்கப் பொருள்களை உண்டு செய்யும் முறைகளையும் அவற்றை உட்கொள்ளும் முறைகளையும் விவரிக்கும்.

கடவுளைப் பற்றியும் பிரம்மத்தைப் பற்றியும் வேதங்களில் காணப்படும் கூற்றுகள் ஒன்றுக்கொன்று பெரிதும் முரண்பாடு உடையவை. இருக்கு வேதம், அக்கினி, வாயு, சூரியனென்று மூன்று கடவுளர்கள் உண்டென்றும் அவற்றுள் ஒரே கடவுளாகிய மகாத்மா உண்டென்றும் அம்மகாத்மாவே சூரியனென்றும் குறிப்பிடும். யசுர் வேதம் 121 ஆவது பாகத்தில் புசிக்கும் உணவு அல்லது உடலே பிரமம் என்றும் 122 ஆவது பாகத்தில் உயிர்ப்பாகிய பிராணனே பிரமம் என்றும் 132 ஆவது பாகத்தில் அறிவே பிரமமென்றும் 124 ஆவது பாகத்தில் ஆனந்தமே பிரமமென்றும் விளக்கும். ஆத்மா பற்றிய கூற்றுகளும் தெளிவற்றவை. சாமவேதத்தின் 146ஆவது பாகத்தில் வானமே ஆத்மாவென்றும் 147ஆவது பாகத்தில் சூரியனே ஆத்மாவென்றும் 148ஆவது பாகத்தில் வாயுவே ஆத்மாவென்றும் 149 ஆவது பாகத்தில் ஆகாயப் பரமாணுவே ஆத்மாவென்றும் 150 ஆவது பாகத்தில் உலகமே ஆத்மாவென்றும் 151 ஆவது பாகத்தில் மண்ணே ஆத்மாவென்றும் கூறப்பட்டுள்ளன.

வேத அந்தமெனப் போற்றப்படும் உபநிடதங்களும் பிரமம் பற்றிய வெவ்வேறு தொடர்பற்ற, பொருளற்ற விளக்கங்களையே முன் வைக்கின்றன. முண்டக உபநிஷத்து இரண்டாயிரம் முண்டகம் முதல் அத்தியாயத்தில் அக்கினியினின்று ஆயிரம் பக்கங்களில் பொறிகள் எப்படி உண்டாகின்றனவோ அது போல் அழிவற்ற பிரமத்திலிருந்து பல ஜீவாத்மாக்கள் தோன்றி மறுபடியும் அதில் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தலவகார் உபநிஷதம் பிரமத்தை அறிவேன் என்பவன் அறியான், அறியேன் என்பவன் அறிவான், பிரமம் தெரியும் என்பவர்களுக்குத் தெரியாது, தெரியாதென்பவர்களுக்குத் தெரியும் என்றுரைக்கும் கடோபநிஷதம் மனத்தினால் மட்டுமே பிரமத்தை எட்ட முடியும் என்று தெரிவிக்கும். கேனஉபநிஷதம் பிரம்மத்தைக் கண்ணாவது வாக்காவது மனமாவது எட்டுவதில்லை, அதை நாம் அறியோம், அதைத் தெரிவிக்கும் வழியும் நமக்குத் தெரியாது என்று ஒத்துக் கொள்ளும் பிரஹதாரண்யக உபநிஷதம் குதிரையேயே பிரமம் என வருணிக்கும். வாஜகாநேய உபநிஷதம் பிரமம் எவ்வித சரீரமும் அற்றவர், ஒளி பொருந்தியவர், பாவமற்றவர், விவேகி, மனத்தை ஆள்பவர் என்றெல்லாம் வாதிடும். முண்டக உபநிஷதம் ஓரிடத்தில் கண்களாலோ, வாக்காலோ, மற்ற இந்திரியங்களாலோ, தவத்தாலோ, கர்மத்தாலோ பிரமத்தைப் புரிந்து கொள்ள முடியாதென்றும் மற்றோரிடத்தில் பிரமம் அணுவைப் போல் மிகச் சிறியவனாகவும்