பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ப. மருதநாயகம் ✤ 49


நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிகளாகக் காட்டும் முயற்சிகளில் காலங்காலமாக வடமொழி அறிஞர்கள் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். ஈச உபநிஷதத்தின் முதல் மந்திரம் சர்மாவால்,

All this, whatsoever, moves in this moving world, is pervaded by God. Though such renunciation you may enjoy. Do not covet; for whose, indeed, is wealth? (சர்மா, 31).

என்று மொழி பெயர்க்கப்படுகின்றது. இதனை அரவிந்தர்,

All this is for habitation by the Lord, whatsoever is individual universe of movement in the universal motion. By that renounced thou should enjoy; lust not after any man's possession (அரவிந்தர், 19).

என்று மொழி பெயர்த்துவிட்டு அறிவிக்கும் கருத்து ஆழ்ந்து எண்ணத் தக்கது.

‘வாஸ்யம்’ என்ற சொல்லுக்கு மூன்று பொருள்கள் சொல்ல முடியும். “to be clothed”, “to be worn as a garment”, “to be inhabited". முதலாவது பொருள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுவது. சங்கரர் இப்பொருளிலேயே அதனை எடுத்துக் கொண்டு, “தூய்மையான பிரமனின் காட்சியில் இந்த உண்மையற்ற புறவயமான உலகத்தின் உணர்வை நாம் இழக்க வேண்டும்” என்று விளக்குவார். முதல் வரி இவ்வாறு விளக்கப்பட்டால் அது உபநிஷத்தின் முழுக் கருத்திற்கும் முற்றும் முரண்பாடானதாகும். உபநிஷதமானது கடவுள் - உலகம், துறத்தல் - துய்த்தல், செயல் - அகவிடுதலை, ஒன்று - பல, இருப்பு - அதன் மாறுபாடுகள், செயலற்ற, தெய்வீக அருவம் - செயலூக்கமுடைய தெய்விக உருவம், அறிவு - அறியாமை, மாறுபடல் - மாறுபடாதிருத்தல், இவ்வுலக வாழ்க்கை - உன்னதமான அமரத்துவம் போன்ற எதிர் மாறானவற்றிலுள்ள அடிப்படை ஒற்றுமையைக் காட்டி அவற்றை இணக்குவிக்கும் வழியைக் கற்றுத் தருகிறது. உலகம் இறைவனுக்கு ஒர் ஆடையாகவோ, வாழும் இடமாகவோ இருக்கிறது என்பதுதான் கூற்றிலுள்ள காட்சியுரு தெரிவிப்பது. வாழும் இடம் என்று எடுத்துக் கொள்வதே உபநிஷதக் கருத்துக்கு ஏற்றது.

சங்கரர் ஈச உபநிஷதத்தின் முதல்வரிக்குக் கூறும்பொருள் உபநிஷதத்தின் அடிப்படைக் கருத்துக்கு முற்றும் மாறானது என்று அரவிந்தர் சொல்வது வியப்புக்குரியது.அரவிந்தர் கூறும் உரை அவர் உபநிஷதத்தில் காண விரும்பும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உபநிஷதம் உண்மையில் என்ன கூறுகிறது என்பதை அறிய முடியாமல் அறிஞர்களின் விளக்கங்கள் அமைகின்றன.