பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


அவர்கள் உண்மைப் பொருளைக் கண்டு கொள்ளவில்லையா, அல்லது தவறான பொருளைச் சொல்லி ஏமாற்ற முயன்றார்களா என்பது தெரிய வேண்டும்.

ஈச உபநிடதத்தின் இரண்டாவது மந்திரத்தை அறிஞர் சர்மா,

Always performing works here, one should wish to live a hundred years. If you live thus as a man, works will not cling to you-there is no other way (சர்மா, 32).

என்றும் அரவிந்தர்,

Doing verily works in this world one should wish to live a hundred years. Thus it is in thee and not otherwise than this; action cleaves not to a man.

என்றும் மொழிபெயர்ப்பார்கள். இம்மந்திரத்திற்கும் சங்கரர் கூறும் பொருள் சரியன்று என்பார் அரவிந்தர்.

சங்கரர் “thus in thee - it is not otherwise than thus - action cleaves not to a man” என்று மொழிபெயர்த்துக் கொண்டு முதல் வரியிலுள்ள ‘கர்மாணி’ எனும் சொல் ‘வேத வேள்விகள்’ என்றும் இரண்டாவது ‘கர்ம’ அதற்கு நேரெதிராக ‘தீய செயல்’ என்றும் பொருள்படும் என்று கூறி அறியாமையால் பீடிக்கப்பட்டவர்கள் வேள்விகளைச் செய்வதன்மூலம் தீய செயல்களிலிருந்தும் அவற்றின் விளைவுகளிலிருந்தும் தப்பித்துத் துறக்கவுலகம் அடையலாம் என்றும் அறிவுடையோர் இவ்வுலகையும் செயல்களையும் புறக்கணித்துக் காட்டிற்குச் செல்வார்களென்றும் இப்பாடல் எடுத்துரைப்பதாக விளக்கம் தருவார். ஆனால் சங்கரரின் மொழிபெயர்ப்பு வலிந்து திணிக்கப்படுவதாகும்; செயற்கையானதாகும். என்னுடைய மொழிபெயர்ப்பே எளியதும் நேரானதும் ஆகும் (அரவிந்தர், 19).

வேதங்களில் போற்றப்பட்டிருக்கும் வேள்விகளை முட்டாள்களுக்கு மோட்சம் அடைய அளிக்கப்பட்டுள்ள வழியென்றும் இவ்வுலக வாழ்க்கை நிராகரிக்கப்பட வேண்டியதென்றும் சங்கரர் கூறுவதால் அதனை மறுக்கும் அரவிந்தர் நூறு ஆண்டுகள் வாழ முயல வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆசை பற்றி ஏதும் சொல்லவில்லை.

சந்தோக்ய உபநிஷதத்தில் கூறப்படும் சத்யகாமனின் கதையை எடுத்துக்காட்டாகக் கூறி அறிவுத் தேட்டத்திற்கும் ஆன்மீக உயர்வுக்கும் சாதி ஒரு தடையென்று வேதங்களும் உபநிஷதங்களும் விதிக்கவில்லையென்றும் இது பின்னால் நிகழ்ந்த கண்டுபிடிப்பென்றும் அரவிந்தர் கூறுவார் (அரவிந்தர், 365). இக்கதை சந்தோக்ய உபநிஷதத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது: