பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்


திருக்குறள் கருத்துக்களை அவ்வாறே சுக்கிரநீதி எடுத்தாளும் இடங்களும் பலவுண்டு. “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”, “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்” எனும் குறட் கருத்து முதல் அத்தியாயத்தில் வலியுறுத்தப்படுவதோடு மூன்றாம் அத்தியாயம் அறிவுடையார் எவ்வருணத்தவராயினும் அவர்பால் பிரமதேசசு நிலைபெறுமெனவும் வேந்தன் எவ்வருணத்தவனாயினும் அவன்பால் சத்திரிய தேசசு நிலைபெறும் (பக். 155-6) எனவும் மொழியும். மனுநூல் உழவுத் தொழில் பற்றி இழிவாகப் பேசியிருப்பதற்கு மாறாக, சுக்கிரநீதி உழவுத் தொழிலைக் குறளின் வழிநின்று,

ஆற்று நீரைத் தாயகமாகவுடைய உழவுத் தொழிலே தலையாய தொழிலாகக் கருதப்படும். பண்டமாற்று முதலிய வாணிகத் தொழில் இடையாயதாம். பிறர் ஏவின செய்யும் சூத்திரர் தொழில் கடையாயதாம் (ப. 155).

என்று ஏற்றிப் பேசும், “நல்லவை யெல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு” எனும் திருக்குறளுக்குச் சுக்கிர நீதி,

இராமனுக்கும் அருச்சுனனுக்கும் நலம் பயப்பதில் காலம் துணை செய்ததென்பது நன்கு வெளியாம். ஊழ் நல்லதாங்கால் சிறு முயற்சியும் நற்பயனை விளைவிக்கும். ஊழ் தீயதாங்கால் பெரிய நற்செயலும் தீய பயனை விளைவிக்கும். மகாபலியும் அரிச்சந்திரனும் கொடையினாலேயே துன்பமுற்றனர் (ப. 8).

என்று தொன்மக் கதை கொண்டு விளக்கமளிக்கும்.

“உரன் என்னும் தோட்டியால் ஒரைந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து” என்னும் குறள், வடநூலில்,

புலன்களாகிய பெருங்காட்டில் ஓடித்திரிவனவும் அடக்க வெண்ணாதனவுமாகிய பொறிகளென்னும் யானைகளை அறிவென்னும் தோட்டியால் அடக்கி வயப்படுத்தல் வேண்டும் (ப. 14).

என்னும் நூற்பா வடிவம் பெறும். அரசன் கடிய வேண்டிய குற்றங்கள் சிறுமை, சினம், மாணாவுவகை, இவறல், மானம், செருக்கு எனும் கருத்து,

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து (431)

இவறலும் மாண் பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு (432)