பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

சு.சமுத்திரம்

வேண்டிய கலெக்டர், பன்னிரண்டாகியும் வரவில்லை. அந்த மாவட்ட நேரு மைய அமைப்பாளர், பிரசவத்திற்கு அலை மோதும் பெண்ணைப் போலத் துடித்துக் கொண்டிருந்தார். கலெக்டருக்காக 'இறக்குமதி செய்யப்பட்ட கூட்டமும், சுயமாக வந்த அறிவொளி இயக்க கூட்டமும் இப்போது அலைமோதின. இளம் பெண்களில் பலரிடம் ஒரு கலக்கம்... என்னதான் அவர்கள் குடும்பத்தினர் இவர்களை இங்கே அனுப்பி வைக்கும் அளவிற்கு முற்போக்காக இருந்தாலும், காலம் கடந்து வீட்டிற்குப் போனால் அதே குடும்பத்தினர் பார்க்கும் பார்வையை இப்பவே கற்பனை செய்து அல்லாடினார்கள். என்றாலும் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்வி. மாவட்ட கலெக்டர் இல்லாது போனால், ஒரு பில் கலெக்டரை வைத்தாவது போட்டியைத் துவக்க வேண்டுமென்பது கூட்டத்தினரின் விருப்பம். ஆனால் மாவட்ட அதிகாரிகள் கலெக்டருக்காகவே கலைப் போட்டிகள்' என்ற பாணியில் எதிர்மாறான விருப்பம் கொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்...? முடியும் என்பதுபோல், "காவடி' முருகன் கலைக் குழுக்களுடன் கிசுகிசுத்துவிட்டு, காவடியை பயபக்தியோடு சுவர் பக்கம் சாய்த்து விட்டு, மேடையை நோக்கி நடந்தான். எட்டு முழ வேட்டியை தார் பாய்த்துக் கட்டியிருந்தான்... துத்தநாக உலோகத்தை உருளையாக்கியது போன்ற உடம்பு... நெற்றியை மறைத்த விபூதி... புருவ நெற்றியை மறைத்த சூரிய குங்குமம்... சாமியானா பந்தல் வழியாக மேடைப் பக்கம் போய் கலெக்டரின் பி.ஏ. (பஞ்சாயத்து)... பி.ஏ. (வருவாய்)... பி.ஏ.(சத்துணவு)... பி.ஏ. (சேமிப்பு) போன்ற அதிகாரிகளை ஊடுருவி, அந்த மாவட்ட நேரு மைய அமைப்பாளரை