பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சு.சமுத்திரம் ❍

இவற்றை உள்வாங்கி, ஒளியாக்கும் தாயார் காலடியில் இருக்கிறாள்.

எல்லையற்ற பிரபஞ்ச ரூபங்களைக் காட்டும் அந்த நாராயணியத்தில், அண்ட கோடியாய் நீண்ட ஒரு கரத்தில் விரல்நுனியில், கோடானுகோடி ரிஷிகளில் ஒருவராய், அகத்தியர் தன்னையும் பார்க்கிறார். கடல்துளியாய் ஆனாலும் தனித்துளியாய் தன்னைக் காண்கிறார். வாமன உயரத்தில், வரிந்து கட்டிய மரவுரியும், நிமிர்ந்து நிற்கும் ஜடாமுடியும், தும்பிக்கைத் தாடியும், காவேரியைக் கவிழ்த்த கமண்டலமுமாய் நிற்கும் தமிழ்முனியான அகத்தியர், சுயத்திற்கு வந்து, சொந்த வேலையை மறந்து, பந்தமற்றுப் பேசினார்.

"அளப்பறியாக் காலமே! புலன்களில் புத்தியே...! உயிர்களில் உள்ளொளியே... எழுத்துக்களில் அகரமே... ஆதித்தர்களில் விஷ்ணுவே... யோகங்களில் சமாதியே.. யட்சர்களில் குபேரனே... யானைகளில் ஐராவதமே... பருவங்களில் வசந்தமே... ஏமாற்றில் பகடையே... பிரபஞ்சம் சுருங்கி, பிரும்மானந்த முட்டையாகும்போது, அந்த முட்டைக்குள் இருக்கும் புருசோத்தமே... நாபிக் கமலத்தில் பிரும்மத்தை தோற்றுவிக்கும் பரப் பிரும்மமே... நீயே... பிரபஞ்சக்கண்ணாடி-தப்பாய் சொன்னேன் பிரபோ... தப்புத்தப்பு... உனக்கு பிரபஞ்சமே கண்ணாடி... உன்னை கடல்களாய், மலைகளாய், கடல்மலை கொண்ட கிரகங்களாய், கிரகங்கள் வட்டமிடும் நட்சத்திரங்களாய், நட்சத்திரங்கள் நடனமிடும் அண்டாதி அண்டங்களாய் காட்டும் கண்ணாடி... பிரபஞ்ச வெளிப்பாடுகள், அசலான உனது நகல்கள்..."

உடனே ஆதிநாராயணன், அனந்தங்கோடி சந்திரப் புன்னகையோடு கேட்டார்.