பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

149

அலைகளே சுவரான ஆயிரமாயிர அண்டச் சுழற்சி மண்டபங்கள்; யுகச் சிப்பிகளால் உருவான கோடி கோடியே ஊழிமண்டபங்கள்... அந்தச் சிப்பிகளில் இருந்து வெளிப்பட்டு, மும்மலம் அற்று முழுமையாய் ஒளி சிந்தும் ஆன்ம முத்துக்கள்... இவற்றிற்குள் நரை, திரை, மூப்பில்லாத, காலத்தின் முழுத் தோற்றமாக, நீரில் மிதக்கும் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷன்... ஒவ்வொரு தலையிலும் ஒரு கோடி சூரிய நகைகள்... பச்சைக் கடலுள் வெள்ளிமலைத் தோற்றம்... காலத்தை இயக்கும் கண்சிமிட்டல்கள். பிரணவப் பேரொளி சிந்தும் அக்கினி அண்டங்களான கண்கள்... பிரபஞ்சமே சங்காக, பிரணவமே சக்கரமாக காட்சி காட்டும் நெற்றிகள்... முத்தொழில் ஆணையைச் செயல்படுத்தும் கற்பக்கோடி பற்கள்... இந்த ஆதிசேச அற்புதத்தின் மேல்-

ஆயிரந்தலைகளின் நிழற்குடைக்குக் கீழே, அதன் ஆத்ம தேகத்தில் பரமாத்மாவான ஆதிநாராயணன்... அவர் நெற்றியில், படைப்புக் கடவுளான பிரமன்... தோள்களில் திசைக் காவலர்களான இந்திரன், வருணன், குபேரன், எமன்... வாய்க்குள் பன்னிரண்டு ஆதித்தர்கள். மார்பில் பதினோரு சூத்திரர்கள்... பூலோகம், தேவலோகம், பாதாள லோகம் எனப்படும் முப்பெரு லோகங்களையும், அவற்றில் நடமாடும் முப்பத்து முக்கோடி தேவர்களையும், நாற்பது நாற்கோடி ரிஷிகளையும் கொண்ட உடல்வாகு... பிரபஞ்சத்தை பிரகாசிக்கச் செய்யும் புன்னகை... நரசிம்மத்தின் கோபப் புன்னகையும், வாமனத்தின் சாந்தப் புன்னகையும், கிருஷ்ணரின் மாயப் புன்னகையும் கலந்த பிரணவப் புன்னகை... ஆயிரமாயிரம் கரங்கள்... அவற்றில் கெளமோடகி எனப்படும் கதாயுதம்... நந்தனா எனப்படும் ஊழிப் பெருவாள்... பஞ்சாட்சணையான சங்கு... சுதர்சனச்