154
சு.சமுத்திரம் ❍
"இவரை நம்பாதே அகத்தியா... சொந்த குலமான நந்தகுலத்தினர்... ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும்படி செய்தவர் இவர். சொந்த மகனான சம்பாவின் வயிற்றில், ரிஷிகள் சாபத்தால் உதித்த உலக்கை, கடலில் துகள்களாய் போடப்பட்டு பின்னர் கடற்புற்களாய் முளைத்தபோது, அவற்றை எடுத்து, யாதவர்களிடையே வீசி, ஆயுதங்களாய் ஆக்கிக் கொடுத்தவர்... தான் அவதரித்த குலத்தையே, தீர்த்த சங்கோத்ரா என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களை கேளிக்கையில் ஆழ்த்தி கெடுமதி கொடுத்தவர்... ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்ல வைத்தவர்..."
"நானும், என்னை உலக்கையின் எஞ்சிய இரும்புக் கம்பியால் கொன்று கொண்டேனே' என்று சொல்லப்போன சொல் விளங்கும் பெருமாளை பேச விடாது, அகத்தியர் இடைமறித்துப் பேசினார்.
"நீங்கள் குறிப்பிட்டதுபோல், தங்கள் நாயகருக்கு இப்போது தமிழ்க் குலம் கிடைத்துவிட்டது தாயே... எம் மக்களையும் கேளிக்கையில் ஆழ்த்தி, நிழல்களை நிஜங்களாகவும், நிஜங்களை நிழல்களாகவும் ஆக்கி விட்டார் அன்னையே... ஒருவனை வீரனாக்க, முப்பது பேரை பேடியாக்கும் திரையுலகில், என் மக்கள் கதாநாயகனிடம் ஒன்றிப் போய்விட்டார்கள் உத்தமியே... இப்போது, இவர்கள் சொல்வதே இவர்களுக்கு பகவத் கீதையாகப் போய்விட்டது. மாதாவே... ஒரு தாய், மகளாய் நினைத்து நட்ட புன்னை மரத்தை, தமக்கையாய் நினைத்து, அந்த மரத்தடியில் தலைவனைத் தீண்டத் துணியாத அந்தக் காலத் தலைவியின் இந்தக் கால கொள்ளுப் பேரன்களும், பேத்திகளும், ஆபாச திரைப்பட தொலைக்காட்சிகளைப் பார்த்து 'ஜொள்ளு' விடுகிறார்களே தாயாரே..."