பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

153

நாவுக்கரசர்களாய் திகழ்ந்தார்கள். இவர்களை ஏன் இருகால் முயல்களாய் ஆக்கினர்கள்..."

"முயல் முன்னோக்கிச் செல்லும் பிராணி... அப்படி ஆக்கப்பட்டால், அதற்காக நீ... எனக்கு நன்றியல்லவா சொல்லவேண்டும்."

"இதை, ஆமையிடம் சொல்லுங்கள்-என்னிடம் வேண்டாம் பிரபோ... முயலின் குணம் பற்றி அறியாதவரா தாங்கள்... ஒரு முயலை-எப்படி இம்சித்தாலும், அது கத்தாது... எதிர்ப்புக் காட்டாது... கத்தியால், கழுத்து அறுக்கப்படும்போது கூட, அழத் தெரியாத அப்பாவிப் பிராணி... எத்தனையோ... அக்கிரமங்கள் கண்ணெதிரே நடந்தாலும், கத்தக் கூட வேண்டாம். ஈனமுணங்கலாய் முனங்கக் கூட முடியாமல் மூளை மழுங்கிப் போனதே தமிழ் இனம்... சொந்த வீட்டையே... யாராவது பட்டா போட்டு... பட்டாக் கத்தியை நீட்டினால், அவர்களது காலில் விழுந்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்களே எம் மக்கள்... ஒரு காலத்தில் கப்பலோட்டிய தமிழர்கள், இப்போது ஆட்டோக்களை கண்டதும், அலறியடித்து ஓடுகிறார்கள்..."

அகத்தியர் ஆவேசப்பட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

"வேல் பாய்ந்தபோதும், விழியாடாமல் இருப்பதே வீரம் என்ற மூதாதையர் சொல் மறந்து, கை இருப்பது கும்பிட, கால் இருப்பது தரையில் படுக்க, தலை இருப்பது காலில் விழ, வாய் இருப்பது சோறு தின்ன மட்டுமே என்று ஆகிப் போனார்களே... அவர்களை இப்படி ஆக்கிவிட்டீர்களே அனந்த பெருமாளே..."

"அகத்தியா... நான் நிரபராதியாக்கும்..."

காலடியில் அமர்ந்திருந்த தாயார் எழுந்து, பேசினார்.