பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

⚪ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

15

இன்னொரு குரல் சத்தம் போட்டது.

“மெட்ராஸ் போயிட்டு வர்றதுக்குத்தான் பாராட்டா? என் கொழுந்தியா மவன்.. கண்ணன்.. 'ஓடிப்போங்க' என்கிற சினிமாவுல நடிச்சிருக்கான்..இதுக்குப் பாராட்டு கிடையாதா...?”

“பயமவன்.. என்ன வேஷத்தில வாரான்லே?”

“வேஷத்தை விடும்.. வாரான் அது போதாதா?”

“ஓ. அவனா, கூட்டத்துல.. ஒரு.. மூலையில.. நின்னு... ஈரோவுக்கு 'ஜே' போடுறான்”.

ஒருவர் அலுத்துக்கொண்டார்.. “நம்ம.. பயலுக.. மற்றவர்களுக்கு 'ஜே' போடத்தான் லாயக்கு.. மத்தவங்களே.. தனக்கு 'ஜே' போடவைக்க மாட்டாங்க.”

முன்மொழிந்தவர் 'பாயின்டுக்கு' வந்தார்.

“அது கிடக்கட்டும்... என் கொழுந்தியா மகனுக்கு பாராட்டு இல்லன்னா... ஒரு இழவும் வேண்டாம்.”

மாடசாமி, காடசாமியைப் பார்க்க, காடசாமி கைநீட்டிப் பேசினார்.

“மச்சான் சொல்றதும் நியாயம்தான்... நம்ம கண்ணன் பய.. அதில சினிமாவுல.. ஒருநொடிதான் வாரான்னாலும்... வந்திட்டானே...அவன் அதுல வந்தனாலதான்.. நம்ம ஊரு டுரிங் தியேட்டர்ல.. அந்தப்படம் ஒரவாரம் ஓடிச்சுது..நம்ம ஊர் சரித்திரத்ல எந்த படமும் ஒருவாரம் ஓடுறது கிடையாது. அதனால..கண்ணனுக்கு ..பாராட்டு வச்சி.. பஞ்சாயத்துத் தலைவரை பொன்னாடை போர்த்தச் சொல்லணும்.”