உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

179

போதும், இப்படியா என்னை உடம்பெங்கும் பொந்துகளாக்கி சித்திரவதை செய்ய வேண்டும்? அடியற்றுப் போனேன். செயலற்று தவிக்கிறேன். உன்னை விரும்பி ஏற்ற என்னை இப்படி வதைக்கலாமா? நான் இருந்தால் தானே நீ வாழ முடியும்? பதில் சொல் மரங்கொத்தி பதில் சொல்..."

"தொண்டு" மரங்கொத்திகளின் 'தூய' பணியை பாராட்டுவதற்காக மேலே எம்பிய அந்த தலைமை மரங் கொத்தி, அந்த மாமரத்தின் அடிவாரத்தில் உள்ள ஒரு பொந்தின் விளிம்பை கால்களால் பற்றியபடியே, அந்த மரத்திற்கு எகத்தாளமாக பதில் அளித்தது.

"ஏய் மாமரமே! உன்னுடைய பாரம்பரியம் என்ன... பண்பாடு என்ன... நீ, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றி மூத்த மரம்... முக்கனிகளில் முக்கிய கனியின் தாயகம்... கோவில் கும்பத்திலும், மங்கல நிகழ்ச்சிகளிலும் முதல் மரியாதை பெறும் இலைகளை ஈன்றெடுத்த மரம் நீ... என் முதுகைப் போலவே மின்னும் மாந்தளிரின் பிறப்பிடம் நீ... வடபுலத்து முரட்டு மரங்களை வென்ற மரம்... தென் மேற்கு தென்னையையும், நேர் மேற்கு பாக்கு மரத்தையும், ஆண்ட மரம் நீ... நீயா இப்படிப் புலம்புவது? உன்னை வதைப்படுத்திய மண் புழுக்களையும், பூச்சிகளையும் என் கூட்டத்தில் ஒவ்வொன்றும் மணிக்கு ஆயிரத்து இரு நூறுவீதம் கொத்திக் கொத்திக் கொன்று தீர்த்துள்ளன... என்னிடம் இருப்பவை நூற்று அறுபத்தைந்து மரங்கொத்திகள். இவை ஒவ்வொன்றிற்கும் சின்ன வீடு, வளர்ப்புப் பிள்ளை சொந்தப் பிள்ளை என்று ஐந்து தேறும். அவையனைத்தும், ஒவ்வொன்றாய் நான் குறிப்பிட்ட மணி வேகத்தில் பூச்சிகளைத் தின்கின்றன... அப்படியானால் எத்தனை பூச்சிகளிடமிருந்து உன்னை காப்பாற்றியிருக் கிறோம்... நீயே கணக்குப் போட்டுப் பார்..."