பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



62

சு.சமுத்திரம் o

பக்கமாய் இடுப்பில் தட்டி, உஷாராக்கிவிட்டு, மிகப்பெரிய ரகசியத்தைக் காப்பதுபோல், வீறாப்பாய் நின்றார்கள். அரசாங்கத்தைதாங்கும் தூண்களாம்..அரசுப் பல்லாக்கு, அவர்கள் இல்லையானால் விழுந்துவிடுமாம்.

கடல்மணி, வாய் வரைக்கும் வந்த உமிழ்நீர், எச்சிலாகும் முன்பே, அதை பின்னோக்கித் தள்ளிவிட்டு, முன்னோக்கி நடந்தார். காற்றில் தென்னை ஆடும்போது, அதில் இருக்கும் ஓணான், அந்த தென்னையை ஆட்டுவதாக நினைத்து, தனது தலையை ஆட்டுமாமே..அப்படிப் பட்ட அலுவலக ஒணான் பயல்கள். இவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றால், இ.பி.கோ. செக்ஷனில் 'புக்காகி கைவிலங்கோடு செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போக வேண்டியது வரும்..

கடல்மணி, நடுவர் மன்ற அரங்கிற்குள் வந்தார். நீதிமேடையையும், அதில் போடப்பட்டிருக்கும் மெத்தை யிட்ட நாற்காலிகளையும் பார்த்தார். முதுகை வளைத் ததுபோல் அரைவட்டமான நீளவாகு மேஜையையும், அதில் கையூன்றி, கட்டுன்றி, நாற்காலிகளின் அடிவாரம் வரை உடம்பை சாய்த்துப் போட்ட வழக்கறிஞர்களைப் பார்த்தார். அவர்களின் இந்த இருக்கைப் பகுதிக்கு இடைவெளி கொடுத்து, வகுப்பறைபோல் போடப்பட்ட நாற்காலிகள் ஒன்றில் உட்கார்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். கட்சிக் காரர்கள்.. வாதிகளோ..பிரதிவாதிகளோ.. வேட்டிகளைக் காண முடியவில்லை. ஒட்டுப்போட்ட சேலைக்காரிகள் கிடைக்கவில்லை. அத்தனைபேரும் சபாரி.. பேண்ட்.. சிலாக்கிலோ அல்லது பைஜாமா..பட்டுப் புடவைக்குள்ளோ இருந்தார்கள். ஆனாலும் பெரும்பாலோர் முகங்களில் கண்கள் தேங்கிக் கிடந்தன. ஏங்கிக் கிடந்தன. கைக் கடிகாரங்களையே, கைவிலங்காய் பார்த்துக் கொண்டன.