பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சு.சமுத்திரம்

இதற்குள் ஜீப்காரர்கள் இறங்கிவிட்டார்கள். என்னமோ ஏதோ என்ற பதறி அடித்துக் கொண்டு அவன், ஜீப்புக்கு முன்பக்கமோ, பக்கவாட்டிலோ நிற்பான் என்று எதிர் பார்த்தவர்கள், முகம் கடுக்க தரையிறங்கினார்கள். வந்தவர்களில் ஒருவர் சபாரி போட்டவர். இன்னொருத்தர் சிறிது தடியல்ல; பெரிய தடி, கழுத்துக்கும் தலைக்கும் வித்தியாசம் தெரியாத வீக்கம். ஆனால் கண்கள் மட்டும் பொடி; மூன்றாமவர் டவாலிக்காரர். அவரது காக்கியூனிபாரத்திற்கும் மேல் மூன்று பட்டை உத்தியோகப் பூணூல்; இடது தோளிலிருந்து வலது இடுப்புவரைக்கும் போய் வில் மாதிரி பின்பக்கமாகவும் வளைந்து சென்றது. செல்லையா தன்னைப் பார்ப்பவர்களைப் பார்த்தான். கடையைத்திறந்த இவ்வளவு சீக்கிரத்தில் போணியாகப் போகிறதே என்ற மகிழ்ச்சியில் கேட்டான், 'சோடாவா" கலரா சார்...' அவர்களும் அவனைப் போணியாக்கப் போகிறார்கள் போல்தான் பார்த்தார்கள். டவாலி மனிதர் அதட்டினார். 'இந்தக் கடைக்கு ஓனர் யாருய்யா?” 'என்ன விஷயம்?" டவாலிக்காரர் திணறினார். திக்கினார். கடைவாய்ப் பல் ஓட்டைகளோடு சபாரிக்காரரை அவருக்கு ஏதோ சவால் வந்திருப்பதைப் போல் பார்த்தார். உடனே அவர் அந்த தடியரைப் பார்க்க, அவரோ, டவாலிக்காரர் கரடுமுரடாய்க் கேட்டதைக் கிண்டலும் கேலியுமாகக் கேட்டார்.