பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14   ✲   ராதை சிரித்தாள்

வல்லிக்கண்ணன்


இல்லை. பார்வைக்காக அவள் சித்திரித்துக் காட்டாத வசிய 'போஸ்'கள் இல்லை!

அவனுக்குச் சிரிப்பு வரும். அனுதாபமும் பிறக்கும். கவரப்படாமலும் இல்லை. 'பெண்களுக்கு எப்படி எப்படி வசியக்கலை பயிலவேணும் என்கிற உணர்ச்சி தானாகக் கைவந்த வித்தையாக மிளிர்கிறது. அதை அவர்கள் சிரத்தையோடு வளர்க்கிறபோது அற்புதக் கலையாக ஒளிர்கிறது!'என்று நினைப்பான்.

பருவ கன்னி ராதை சிதறிய கலையொளிகளைக் கண்டு களிக்கும் ரசிகனாக மாறாமல் இருக்க இயலவில்லை அவனால். அவள் தனது திறமையை மெருகிட்டு வளர்த்து வந்தாள் நாளுக்கு நாள்.

அவன் திண்ணையில் இருக்கும் போது, அவள் திண்ணையோரமாக மெது நடைநடந்து, கோணப் பார்வை சிந்திப் போவாள், உடையலங்காரம் செய்து கொள்வதாகப் பம்மாத்துப் பண்ணி அவன் பார்வையில் படும்படி எனனென்னவோ செய்து சிரிப்பாள்.

திடீரென்று ஒரு நாள் 'என்ன மாமா, மணி என்ன ஆகுது?' என்று கேட்டு வைத்தாள். பிறகு 'சாப்பிட்டாச்சா?' என்று கேட்டாள். இப்படி ஏதாவது கேட்க சந்தர்ப்பங்களை சிருஷ்டித்துக்கொண்டாள் ராதை.

அவள் போக்கு அவனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அதை அவன் வளர்த்துப் பாராட்டத் தயாராக இல்லை. என்றாலும் அதைத் தவிர்க்க அவள் இடம் கொடுப்பதாகவும் தெரியவில்லை.

காலையில் போனால் இரவில் வீடு திரும்பும் தந்தை மகள் வாழ்விலே நேர்ந்த பரிணாமங்களை அறிய இடமே இல்லை. தாயின் அறிவுக்கு மகளின் மாற்றம் புலனாகவே யில்லை. தாய் வழக்கம் போல் தனது காரியங்கள், புலம்புதல்கள், குறை கூறல், வம்பளப்பு இவைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள். அவளுக்கு சந்தேகம் எற்படாதபடி சாமர்த்தியமாக நடந்துகொள்ளவா தெரியாது ராதைக்கு!

ஒரு நாள் பகல் நேரத்தில், அவள் தாய் கூட வீட்டில் இல்லை. அடுத்த தெருவில் நடந்த விசேஷம் எதற்கோ-