பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


உதிர்த்தார் பரமசிவம்.

'குமாரி செல்வாவுக்குக் குதித்துக் குதித்தோடி வரத்தான் தெரியுமே தவிர, தென்றல் நடை நடக்கத் தெரியாது போலும்!' என்றார் அவர்.

'போதும்!' எனச் சிடுசிடுத்தாள் சிங்காரி, நீலப் பாவாடை அலையென ஆட, ரோஜா நிறத் தாவணி அசைந்தாட இரட்டைப் பின்னல் நெளிந்தாட, கரு விழிகள் நில்லாது சுழன்றாட ஓடி வந்த குமாரி அமைதியாக நிற்கத் தெரியாதவள் போல் அசைந்தாடி நின்றது ஆசிரியரின் விமர்சனத்திகு அழுத்தம் கொடுத்தது.

'உட்காரலாமே!’ என்றார் அவர்.

'இங்கு நான் உட்காருவதற்காக வரவில்லை!' என்று சினுங்கினாள் எழிலி.

'சந்தோஷம். அப்போ தாராளமாக நில்லுங்கள்! எனக்கனைத்தார் பரமசிவம்.

'சும்மா நின்று கொண்டிருப்பதற்காகவும் வரவில்லை!' என்று சிறினாள் பாவை.

'ரொம்ப சந்தோஷம் கோல மயில் போலக் குதித்தாடுங்கள். வன்னப் புறா போலே வட்டமிட்டு....'

'நிறுத்துங்கள் ஸார்!' என்று பாய்ந்தது அவளது கட்டளை. ஆசிரியர் திகைத்து விட்டார். அவர் மேலும் திகைக்கும்படி சொன்னாள் அவள்:

'நீங்கள் மகத்தான தீங்கு இழைத்து விட்டீர்கள். எனக்கு இதைவிட வேறு அகெளரவம் என்ன வேண்டும்?'

'என்ன? என்ன விஷயம்?' -உண்மையாகவே அவருக்கு விளங்கவில்லைதான்.

‘என்னைப் பற்றி தப்புந் தவறுமாக எழுதிவிட்டு...'

அப்படி ஒன்றும் தவறுதலாக எழுதவில்லையே! உங்களுக்கு ஐஸ் க்ரீம் பிடிக்கும் என்று எழுதியது தப்பா? தினம் ஒரு டஜன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவாள் என்றது தவறா? கன்றுக் குட்டிபோல் குதித்தோடி வரும் குணம் என்று குறிப்பிட்டது...'

'அதெல்லாமில்லை. வர்ணனையில்....'