பக்கம்:ஒரு வீட்டின் கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53   ✲    குமாரி செல்வா

வல்லிக்கண்ணன்


திறமைக்கு வளர்ச்சியும் புதுப்பொலிவும் அளிக்க முயன்றவர். அவருக்கு வயது முப்பத்தைந்து தானிருக்கும். அழகர். குளுமையாகப் பேசுவார். நல்ல பெயரிருந்தது அவருக்கு. ராஜாவின் உறவில் அலுத்துப்போன குமாரி செல்வா கலையானந்தரைத் தழுவும் பூங்கொடியானாள். அவள் போக்கைக் கண்டித்த ராஜாவை விரட்டியடித்தாள்.

'எனக்கு எல்லாம் வேண்டியதுதான். சரியான பாடம் படித்தேன்' என்று தன் அனுபவத்தையும் பணச்செலவையும் புத்திக் கொள்முதல் கணக்கிலே பதிவு செய்து கொண்ட ராஜா அவள் உலகிலிருந்து அஸ்தமனமாகி விட்டான். அதற்காக அவள் வருந்தவில்லை.

அவனும் ஏங்கிச் செத்துவிடவில்லை. தனது குலத்துப் பெரியோர்கள் தேர்ந்து நிச்சயித்தபடி சுபயோக சுபமுகூர்த்தத்திலே செளபாக்கியவதி ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டு நல்வாழ்வு வாழத் தொடங்கினான்.

'நாட்டிய அழகி' என்று புகழ்பெற்ற குமாரி செல்வாவுக்கு சினிமாப் புகழ்பெறும் ஆசை வளர்ந்தது. அவள் அழகிலும் புகழிலும் மயங்கிய டைரக்டர் ஒரு வரை அவள் முன் கொண்டுவந்து தள்ளியது சந்தர்ப்பம். அவர் அவள் ஆசையைத் தூண்டிவிட்டு தனது ஆசையைத் தணித்துக் கொண்டார்!

சில மாதங்கள் அவருடன் சுற்றியலைந்தும், சினிமாப் பார்த்ததும், ஜாலி வாழ்வு வாழ்ந்ததும்தான் கண்ட பலன். அவர் டைரக்ட் செய்வதாகயிருந்த படம் பேச்சளவிலேயே முடிந்து விட்டது. பணம் போடத் தயாராகயிருந்தவர்கள் அந்த எண்ணத்தையே கை விட்டுவிட்டார்கள். ஆகவே ஆறேழு மாதங்களுக்குப் பிறகு செல்வாவைக் கைவிட்டு விட்டார் அவர்.

குமாரி செல்வாவுக்கு 'உலகம் எப்படியிருக்கிறது' என்ற உண்மை சிறிது சிறிதாகப் புரிந்தது. அதற்குள் அவள் எத்தனையோ விதமான அனுபவங்கள் பெற்று விட்டாள். ரகம்ரகமான ஏமாற்றுக்காரர்கள், பகட்டுப் பெரியார்களுடனெல்லாம் பழக நேர்ந்தது.

‘இவர்களை யெல்லாம் பார்க்கும்பொழுது, ராஜா எவ்வளவோ நல்லவர் என்று தோன்றுகிறது' என்று எண்ணுவாள்