பக்கம்:ஒரே உரிமை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

யாருக்குப் பிரதிநிதி

காதலித்து இரகசியமாக மறு விவாகம் செய்து கொண்டார்!

'பொதுஜனப் பிரதிநிதி' என்ற ஒரே ஒரு காரணத்துக்காக, அவருடைய 'சிக்கலான வாழ்க்கை'யைச் சிலர் இன்னும் சிக்கலாக ஆக்கி வந்தனர். அவர்களைச் சேர்ந்தவர்கள்தான் அந்தச் செம்படவர்களும். அந்தத் 'தரித்திர'ங்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்த ஸ்ரீ அன்னவிசாரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லே.

அவருக்கு எதிரே பிரெஞ்சு அறிஞனான ரூஸ்ஸோவின் புத்தகமொன்று கிடந்தது. ஒரு காரணமுமில்லாமல் அதை எடுத்துப் புரட்டினர். அரசியல் நிர்வாகிகளைப் பற்றி அந்த மேதை எழுதியிருந்த ஒரு விஷயம் அவருடைய கவனத்தைக் கவர்ந்தது:

'அரசியலை நிர்வகிக்கும் ஒவ்வொரு அதிகாரிக்கும் மூன்று வித மனப்பான்மைகள் இருக்கின்றன. முதலாவது, அவனுடைய சொந்த மனப்பான்மை; இது சுயநலத்தை நாடுகிறது. இரண்டாவது, ஆளுகின்ற மனப்பான்மை; இது சர்க்கார் நலத்தை நாடுகிறது. மூன்றாவதாகத்தான் மக்களுடைய மனப்பான்மை இருக்கிறது; இது மக்களுடைய நன்மையை நாடுகிறது.

நியாயமும் நேர்மையும் கொண்ட அரசாங்கம் நடைபெற வேண்டுமானால், சர்க்கார் நிர்வாகிகள் முதலாவது மனப்பான்மையைக் கைவிட வேண்டும். அதாவது, அவர்கள் சுயநலத்தைக் கருதக் கூடாது. இரண்டாவது மனப்பான்மை ஓர் அளவுடன் இருக்க வேண்டும். அதாவது, சர்க்காருடைய நன்மையைக் கவனிக்க வேண்டுமென்றாலும் அதுவே முக்கிய மானதாயிருக்கக் கூடாது. மூன்றாவது மனப்பான்மையைத் தான் அவர்கள் முதன்மையானதாகக் கொள்ள வேண்டும். அதாவது, மக்களுடைய நன்மையை முக்கியமாகக் கொண்டு, அந்த நன்மையின் மூலமாக மற்ற இரண்டு நன்மைகளையும் அடையப் பார்க்க வேண்டும். இந்த முறையை விட்டுவிட்டு, முதல் இரண்டு நன்மைகளின் மூலமாக மக்களுடைய நன்மையை நாடவே கூடாது.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/108&oldid=1149381" இலிருந்து மீள்விக்கப்பட்டது