பக்கம்:ஒரே உரிமை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காரியவாதி


விருத்தாசலம் பாயில் படுத்துப் பத்துப் பதினைந்து நாட்களாகிவிட்டன. இதன் காரணமாக அவனுடைய மனைவியான பொன்னி கண்ணயர்ந்து ஒரு வார காலமாகி விட்டது. இந்த நிலையில் எந்த நேரமும் "என்னுடைய வயிற்றுக்கு வழி என்ன?" என்று அவர்களைப் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை.

இவர்களுக்கெல்லாம் கார்டியனாக இருந்தது ஒரே ஒரு கறவை மாடு. எஜமானும் எஜமானியும் தன்னை எத்தனை நாளைக்குத்தான் பட்டினி கிடக்கச் செய்தாலும், அது இயற்கையாகக் கிடைக்கும் புல் பூண்டுகளை மேய்ந்து விட்டு வந்து, வேளைக்கு உழக்குப் பாலையாவது கறந்து விடும். அந்தப் பாலிலிருந்து ஒரு பாலாடைகூடத் தன்னுடைய குழந்தைக் கென்று எடுத்துக் கொள்ள மாட்டாள் பொன்னி, "அதற்கென்ன கேடு! கத்தும்போது கொஞ்சம் சர்க்கரைத் தண்ணீரை ஊற்றி வைத்தால் போச்சு!" என்பது அவளுடைய எண்ணம்.

ஏன் தெரியுமா? விருத்தாசலம் பாயில் படுத்து விட்ட பிறகு அவர்களுடைய பிழைப்பே அந்தப் பாலில்தான் இருந்தது. அந்த உழக்குப் பாலுடன் அவள் பாவ புண்ணியத்தைக் கூடக் கவனிக்காமல் கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து வீடு வீடாகச் சென்று விற்றுவிட்டு வருவாள் அப்படிச் செய்தால்தான் அவர்கள் தங்களுடைய வயிற்றுக் கவலையை ஒருவாறாவது தீர்த்துக் கொள்ள முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/113&oldid=1149397" இலிருந்து மீள்விக்கப்பட்டது