பக்கம்:ஒரே உரிமை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தையின் குதூகலம்

51

“சரி, அம்மாவையே ஒரு நாளைக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னால் போகிறது!” என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, மேலே சங்கரின் பேச்சைக் கேட்பதற்குத் தயாரானான்.

“அப்பாலேதான் பஜாருக்கு வந்தோம்; அங்கேதான் இந்தக் குதிரையை வாங்கினோம்!” என்று தன் கதையை முடிக்கும்போதும் நீட்டி முழக்கிக் கொண்டே முடித்தான் சங்கர்.

“சங்கர், சங்கர்! இந்தக் குதிரை மேலே நானும் கொஞ்ச நேரம் ஏறிச் சவாரி செய்யட்டுமா?” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டே அந்தக் குதிரையை நெருங்கினான் மணி.

தான் சொல்வதற்கோ, அவன் கேட்பதற்கோ அதற்கு மேல் ஒன்றும் இல்லாமற் போகவே, தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்து விட்டவர்களைப் போல, “போடா, போ!” என்று எரிச்சலுடன் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் சங்கர்.

அதற்குப் பிறகு அவன் தன் ‘குதிரைப் புராண’த்தைச் சொல்வதற்கு வேறு பையனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்!

***

திர்வேலு நாடார் எண்ணெய் மண்டியில் மணியின் தகப்பனாருக்கு வேலை. வரவு செலவுக் கணக்கைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வாங்க வருவோருக்கு எண்ணெய் அளந்து ஊற்றும் வரை உள்ள எல்லா வேலைகளையும் அவரேதான் பார்த்துக் கொள்ள வேண்டும். மாதச் சம்பளம் முழுசாக அவருக்குப் பதினைந்து ரூபாய். இவ்வளவு தாராளமாக நாடார் அவருக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்ததற்குக் காரணம், பூமிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/53&oldid=1148964" இலிருந்து மீள்விக்கப்பட்டது