பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

7

அப்போது—

உண்டுமுடித்துக் கைகழுவிக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் காந்திராமனின் பார்வையில் நேரு தென்பட்டான். ஏக்கமும் கவலையும் மிஞ்ச நேருவைத் தொடர்ந்தார்;

காலடி ஓசை கேட்டதுதான் தாமதம்!— திரும்பிப் பார்த்தான் நேரு, அவனுக்கே உரிய உண்மைத் தெளிவுடன் தலைமை ஆசிரியரை நேர்கொண்ட பார்வையால் நோக்கினான்!— “ஐயா! என்னோட அம்மாவுக்கு நாலு நாளாக உடம்புக்கு முடியலிங்க; நாளும் கிழமையுமாய் உழைச்சு உழைச்சு, என் அப்பாவுக்கும் காய்ச்சல் வந்திடுச்சுங்க! — அதனாலேதான், என்னோட! ராசாங்கத்துச் சாப்பாட்டை என்னைப் பெற்றவங்களுக்காக எடுத்துக்கிட்டுப் போறேனுங்க, ஐயா!... இது தப்பு இல்லீங்களே?” என்றான்!

மனிதாபிமானத்தால் மனம் நெகிழ்ந்தார் காந்திராமன்; அன்போடு புன்னகை செய்தார்; விழிகளிலே கண்ணிர் புன்னகை புரிந்தது. “நேரு உனக்குப் பசிக்குமே?” என்று கேட்டார்.

என்னைப் பெற்றவங்களோட பசி அடங்கிட்டா, அப்பவே என்னோட பசியும் அடங்கிடாதுங்களா, ஐயா?” என்றான் சிறுவன் நேரு.

அரைக் கணம் மேனி சிலிர்த்திட நின்று விட்டார் காந்திராமன். கதர்ச் சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபாய்ப் பணத்தை எடுத்தார்.