பக்கம்:ஓங்குக உலகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

ஓங்குக உலகம்


‘குடிதழீஇ’ச் செல்லும் நிலையினை உணர்த்துகின்றாரன்றோ! வள்ளுவர்தம் அறிவென்பது, வெறும் தேர்வில் பெறும் வெற்றியைக் கணக்கிடும் இன்றைய உலகுக்குப் புரியாததாக இருக்கலாம். ஆனால் அவர் திட்டமாக மக்கள் வாழ்வினைத் தன் வாழ்வாக மதிப்பிடும் மன்னன் எப்படி இருக்கவேண்டும் என இந்த அதிகாரத்தால் நன்கு காட்டுகிறாரன்றோ! ‘உலகம் தழீஇய தொட்பம்’ என்பதன் கருத்தென்ன? அவன் ‘காட்டு ராஜ தர்பார்’ நடத்தும் நிலையில் வாழ முடியாதல்லவா! ‘எவ்வ துறைவது உலகம் உலகத்தோ டவ்வ துறைவதறிவு’ என்பது எதைக் காட்டுகிறது? உலகம் விரும்பும் நெறியில் செல்லவேண்டிய பண்பைத் தானே! அவ்வாறு செல்வது தானே மக்கள் ஆட்சி! வழிவழியாக வரும் மன்னனாயின் இத்தகைய அறிவு ஏன்? அவனை யார் என்ன செய்ய முடியும்? அவனுடைய பங்காளிகளோ மாற்றாரோ அவனை அழிக்கலாம்; ஆனால் மக்கள் அவன் வாக்கை மீற மாட்டார்களல்லவா! அதுதானே முடியாட்சி. இதையா வள்ளுவர் வற்புறுத்துகிறார்? மேலும், வழிவழியாக வரும் முடியாட்சி மன்னர் அனைவரும் அறிவுடையவராக இருக்கவேண்டும் என நியதி ஏது? இருக்கத்தான் முடியுமா? அவ்வாறு இல்லையானால் அவனை நீக்கி வேறு ஒருவரை மன்னனாக்கிக் கொள்ள வழிதான் உண்டா? எனவே வள்ளுவர் இந்த அறிவுடைமையால் ‘அறிவுடை யோனாறு அரசும் செல்லும்’ என்ற உண்மையை வற்புறுத்தி, மக்கள் தம்மை ஆளும் தலைவர்களைத்-தாம் தேர்ந்தெடுக்கும் தலைவர்களை அறிவு உடையவர்களாகவே இருக்கச் செய்தல் வேண்டும் என்பதையே விளக்குகிறார்.

இன்னும் அரசியலில் வருகின்ற பல அதிகாரங்களும் இத்தகையனவே. ‘குற்றங் கடிதல்,’ பெரியாரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/159&oldid=1127956" இலிருந்து மீள்விக்கப்பட்டது