பக்கம்:ஓங்குக உலகம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

ஓங்குக உலகம்


வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால்–அதில்
மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்மைகள் எல்லாம்—இங்கு
யாவர்க்கும் ஓன்றெனக் காணிர்!

என்பது பாரதி வாக்கு.


இந்த வாழ்வின் அடிப்படையான சாதி வேறுபாடற்ற, சமய வேறுபாடற்ற மெய்ந்நெறி வாழ்க்கையினை விளக்கவே இந்த ‘முரசு’ கொட்டி அறிவிக்கும் நீதியினை அவன் தொட்டான். இனி, மறுபடியும் முரசினை முழக்குகிறான் பாரதி. முழக்கி, இந்த வேறுபாடற்ற வாழ்க்கைக்கு அடிப்படையான அன்பினையும், நம்பிக்கையினையும், அஞ்சாமையினையும் அறிவையும் தொட்டுக் காட்டி முரச முழக்கத்தை முடிக்கின்றான்.

அன்பு வாழ்வின் அடிப்படை. எனவே ‘அன்பென்று கொட்டு முரசே’ என்கிறான் பாரதி. அதில் ஆக்கம் உண்டு, இன்பம் உண்டு, துன்பம் இல்லை; சூது பிழைகள் இல்லை என எக்காளமிடுகிறான். இந்த வாழ்வின் அடிப்படை இல்லாமையால்தான் எத்தனையோ பிழைகளை வளர்த்துக் கொண்டு மனித சமுதாயம் வாடி வற்றல் மரமாகி நிற்கிறது. பாரதிக்கு மறுபடியும் இறையுணர்வு மேலிடுகிறது. மனிதன் யாவும் தன்னால் ஆகின்றது என்ற தருக்கில் அல்லவா இத்தகைய வேறுபாட்டுக் கொடுமைகளையும் பிற் தீமைகளையும் புரிகின்றான். இவன் இறைவுணர்வு பெற்றால், ‘எல்லாம் அவன் செயல்’ என்ற நினைப்பில் தன்முனைப்பு அகலு மன்றோ! அதன் வழி தன் இனத்தான்—பிற இனத்தான் என்ற பேதம் போகுமன்றோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/169&oldid=1127989" இலிருந்து மீள்விக்கப்பட்டது