பக்கம்:ஓங்குக உலகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஓங்குக உலகம்


எங்கோ படுகுழிக்கு இழுத்துச் செல்லுகிறது என்பதை நல்லோர் உணர்வார்.

‘அஞ்சாமை அரசர்க்குரிய இயல்புதானே நமக்கு அது ஏன்?’ என்று சிலர் மனத்துக்குள் எண்ணியும் சிலர் வெளியில் பேசியும் வாழ்வதை நாம் அறிவோம். இருபதாம் நூற்றாண்டின் இடையில் வாழும் குடியாட்சியில் எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அந்த மறதி உண்டாகாதிருப்பதற்காகவே ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, குடியாட்சி நாடுகளில் தேர்தல் நடத்தி நாடாளும் நல்லவரும் வல்லவரும் வீடுதோறும் வந்து வேண்டி வரம் கிடக்கவேண்டிய நிலை உண்டாக்கப் பெறுகின்றது. எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் அஞ்சாது வாழவே கடமைப்பட்டவனாகின்றான்.

சமயத் தலைவர்கள் இந்த உண்மையை நன்கு விளக்கிக் காட்டுகின்றார். நாடாண்ட மகேந்திரன் ‘வருக’ என்று ஆணையிட்டபோது, ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்று வீறு பேசி, வெற்றி கண்ட வாகீசராகிய நாவுக்கரசர் வாழ்ந்த நாட்டில்தான் நாமும் வாழ்கின்றோம். ‘அஞ்சுவதியா தொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை’ என்ற அவர் பாடலை வாயிடை முணு முணுத்துக் கொண்டே, அஞ்சாததற்கெல்லாம் அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம். ‘யாமார்க்கும் குடியல்லோம் யாதுமஞ்சோம்’ என்ற மணிவாசகரின் அடியை ஓதி ஓதி உடனுக்குடன் அஞ்சி அஞ்சியே நாம் வாழ்கின்றோம். இந்த நிலை எல்லா நாடுகளிலும் காணப்பெறுகின்ற ஒரு நிலையேயாகும்.

இவ்வாறு அஞ்சாத பொருளுக்கெல்லாம் அஞ்சி வாழ்கின்ற வாழ்வே மனித வாழ்வாகாது. இயேசு தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/25&oldid=1127272" இலிருந்து மீள்விக்கப்பட்டது