பக்கம்:ஓங்குக உலகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஓங்குக உலகம்



தமிழில் விழாவின் அடிப்படையாக அமைந்த சொற்களைக் கண்டு அவற்றை விளக்கிய மேலைநாட்டு அறிஞர் (T. Burrou and M.B. Emeneau—Dravidian Etymological Dictionary) ஐந்து சொற்களை இதற்கு அடிப்படையாகக் கொண்டனர். ‘உக’ (476) என்ற அடிப்படையில் உகப்பு, ஓகை என்ற சொற்கள் மகிழ்ச்சியில் விளையும் விழாக்களாக அமையும், ‘நோன்’ (3147) என்பதன் அடியாக நோன்பு விழாவாக அமைகின்றது. பண்டிகை (3221) விழாவாகின்றது ‘பாண்’ அடியாகப் பாணர்-இசைவாணர் வழியும் விழா அமைகின்றது. ‘வேண்டு’ என்பதன் அடியாக வேண்டுதல், வேண்டுமை, வேட்பு என்ற வகையில் விழாவாற்றிட வேண்டிய பெறும் சிறப்பு காட்டப்பெறுகின்றது. இவ்வாறு விழாக்களின் அடிப்படை பல வகையில் அமைகின்றது.

தனி மனிதனைப் பற்றிய விழா அவன் பிறப்பதற்கு முன் தொடங்கி, மறைந்து அவன் நினைவுள்ள வரையிலும் நடைபெறுகின்றது. கருவளர் சிறப்பின் வளைகாப்பு. சீமந்தம் தொடங்கி, பிறந்தநாள் விழா, மணவிழா, மகப்பேறுவிழா, மணிவிழா என்ற வாழ்நாளில் அமையும் விழாக்களும் மறைந்தபின் சடங்கு அடிப்படையில் நடைபெறும் நினைவு விழாக்களும் தனி மனித விழாக்களாக அமைகின்றன. கூட்டு விழாக்களாகச் சமுதாய அமைப்பில் பொங்கல் விழா, புத்தாண்டு விழா, நிறைமதி பிறைமதி விழாக்கள், வசந்த விழா, வேனில் விழா போன்றவை நடைபெறுகின்றன. திறப்பு விழா, கால்கோள் விழா, தொடக்க விழா என்பனவும் கம்பன் விழா, வள்ளுவர் விழா என்பன போன்ற விழாக்களும் உள. சமய அடிப்படையில் பாரதத்தில் விநாயகர் சதுர்த்தி, கலைமகள் விழா, கார்த்திகை விழா, தீபாவளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/29&oldid=1127282" இலிருந்து மீள்விக்கப்பட்டது