பக்கம்:ஓங்குக உலகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல உள்ளம்

41


முதல் இன்றுவரை எண்ணற்ற வகையில் விடை காட்டி வருகின்றனர். உலகமே அந்த நல்லுள்ளத்தாலும் அதன் வழி அரும்பும் சான்றான்மையாலுமே வாழ்கின்றது என்ற உண்மையை வள்ளுவர் பல பாக்களில் காட்டுகின்றார். இந்த நல்லுளத்தாரை எண்ணித்தான்,

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்று பண்டைப் புலவர் பாரினை வாழ்த்துகின்றார்.

இந்த நல்லுளத்தில் அரும்பும் உணர்வு உலகை வாழ்விக்கின்றது. அவ்வுணர்வில் இன்னார் இனியார் என்ற வேறுபாடு இல்லை-உற்றார் அற்றார் என்ற மாறுபாடு இல்லை; மாற்றோரும் இல்லை; கேளிரும் இல்லை. அவ்வுள்ளத்துக்கு ஓரறிவுடைய உயிரும் ஆறறிவுடைய உயிரும் ஒன்றே. உளத்தன்மையில் வேறுபடினும் உயிர்த்தன்மையில் புல் முதல் மனிதன் வரையில் அனைவரும் ஒன்றே என்ற உண்மையைப் பண்டைய புலவர் பாராட்டியுள்ளனர். இன்றைய அறிவியலறிஞர் உணர்ந்து காட்டுகின்றனர். நாத்தழும்பிருப்பப் பாடாதாயினும் முல்லைக்குத் தேர் ஈந்தது பாரியின் நல்ல உள்ளம். மயிலுக்குப் போர்வை ஈந்தது பேகன் உள்ளம். ‘எல்லார்க்கும் கொடுமதி’ என்று அறிவுறுத்தியது புலவர் உள்ளம். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியது’ வள்ளலார் உள்ளம்.

இந்த நல்ல உள்ளங்கள்தாம் நாட்டில் விழாக்களைத் தோற்றுவிக்கக் காரணமாயின. ‘நாம் வாழ்வது இருக்கட்டும்; நாடு வாழ்கிறதா?’ என்ற அவ்வுள்ளங்கள் எழுப்பிய வினாவுக்கு விடைகளே இந்த விழாக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/44&oldid=1127317" இலிருந்து மீள்விக்கப்பட்டது