பக்கம்:ஓங்குக உலகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஓங்குக உலகம்


“பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி”

வள்ளுவ முதுமகன் இந்திரவிழாவினை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறான் என்று இருபெருங் காப்பியங்களும் நமக்கு உணர்த்துகின்றன. ஆம்! எல்லா நாட்களிலும் மக்கள் அவலம் நீங்கி நலமெலாம் பெற்று வாழ வேண்டியவர்களே! ஆயினும் எத்தனையோ எதிர்பாராத சூழல்களாலும் பிறவற்றாலும் அந்நிலை முற்ற இல்லையாயினும் விழாக்காலங்களிலாயினும் அந்த நிலை அரும்ப வேண்டும் எனக் கருதிய அந்த நல்ல உள்ளங்கள் அப்படி நினைக்கின்றன. ஆம்! நாட்டில் பசியும் பிணியும் பகையும் இல்லாத நாளே விழா நாள்! அப்படியே மழை பொழிந்து அதன்வழி வளங்கொழிக்கக் கண்டு மகிழும் நாளே விழாநாள்! தமிழர்தம் விழாநாள்கள் பலவற்றுள்ளும் சிறந்த இப் பொங்கல் நாள் இந்த அடிப்படையில் அமைந்ததேயாகும்.

இத்தகைய நல்ல உலகைக் காண விரும்பும் நல்ல உள்ளங்கள் தம் மாசினை முதலில் போக்கிக்கொள்ள வேண்டும். புறத் தூசினையும் அகத் தூசினையும் ‘தீயினில் தூசாகச்’ செய்து இருவிடத்தும் தூய்மை காணும் நாளே போகி நாள். இன்னலுக்கும் இடருக்கும் ‘போக’ எனப் போகியிட்டபின், அடுத்த நல்ல நாளில் உள்ளங்கள் மகிழ்ச்சியினில் பொங்குகின்றன. அந்தப் பொங்கிய நல்லுளத்தில் பரந்த உலகம் இன்பில் திளைக்கவேண்டும் என்ற உணர்வு அரும்ப, உலகைச் சுற்றி நோக்கிடுகின்ற விழாவாகப் பொங்கல் அமைகின்றது. மனிதன் மட்டும் இன்பில் திளைத்து இனிமையில் பொங்கினால் போதாது, ‘எல்லா உயிரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே நல்லது’ என்ற உணர்விலே மாட்டுப் பொங்கல் அமைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/45&oldid=1127555" இலிருந்து மீள்விக்கப்பட்டது