உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் இரவு

83


[பவானி திகைக்கிறாள். அவளுடைய கழுத்தை நெறிக்கிறார் தேவர். அவள் கூவுகிறாள். ஜெக வீரன் ஓடிவருகிறான். காட்சியைக் காண்கிறான். காமிரா ஒரு நிமிஷம் வேலை செய்கிறது. பவானி பிணமாகிறாள். சொர்ணம் ஓடிவிடுகிறாள் ஜெகவீரன் பவானியைத் தொட்டுப் பார்த்து]

ஜெ : விலாசனி மறைவாள் என்று நினைத்தேன், பவானியே இறந்துவிட்டாள்.

தே : இறந்துவிட்டாள்! பவானி இறந்துவிட்டாள்!

ஜெ : (கோபமாக) பவானியைக் கொன்றுவிட்டாய். கொலை செய்திருக்கிறாய்.

தே : ஆ! ஐய்யோ! கொலை! இதென்ன கோலம்! பவானி! பவானி!பிணம்! என் மனைவி! நான் கொன்றேன்.

ஜெகவீரா! ஏன் பவானியை இங்கே அழைத்து வந்தாய்? சொந்தத் தங்கையை, வேறோர் சீமானிடம்.... சரசமாட ஆஹா! சகிக்க முடியவில்லையே!

ஜெ : முட்டாள்! என் கடனைத் தீர்த்துக்கொள்ள சிறு கபடநாடகமாடினேன். பவானியை, விலாசனி என்ற மாறு பெயருடன் இங்கே அழைத்து வந்தேன், பாட்டுக் கச்சேரிக்காக. நீ, படுகொலை செய்துவிட்டாய். இதோ (காமிராவைக் காட்டி) படம் பிடித்திருக்கிறேன் பார்! உன்னை என்ன பாடுபடுத்துகிறேன்.

தே : படுபாவி! மோசக்காரா!

ஜெ : வாயை மூடடா கொலைகாரா!

[தேவர் மயக்கமடைகிறார்.]

காட்சி - 34

இடம் : தேவர் வீடு.
இருப்போர் :- தேவர், சேகர்.

[தேவர், பழையநாள் படுகொலை பற்றிய தகவலைக் கூறிமுடிக்கிறார்.]

தே : சேகர்! அத்தகைய கொலைகாரன் நான். பவானியைக் கொன்ற பாதகன். என் மகள் சுசீலாவுக்கு அப்போது பத்துவயது. பள்ளிக்கூடத்தில் இருந்தாள். தாயார் மாரடைப்பால் இறந்துவிட்டதாக அவளுக்குக் கூறப்பட்டது. இன்று வரையில் என் மகள், பவானி மாரடைப்பால் இறந்ததாகவே நம்புகிறாள். உலகமும் அப்படியே நம்புகிறது.