84
அறிஞர் அண்ணா
[தேவர் கண்களில் நீர் தளும்புகிறது.]
அண்ணன் பட்ட கடனைப் போக்க, அவன் கூறிய ஈனத்தனமான யோசனையைக் கேட்டு, வியாபாரியை ஏமாற்ற விலாசனி என்ற வேஷம் போட்டுக்கொண்டு போய், அக்ரமக்கார அண்ணனை பேராசை பிடித்த வியாபாரியின் பிடியிலிருந்து தப்பவைத்து, தன் உயிரையே தத்தம் செய்த உத்தமி, தியாகி, பவானியைக் கொலைசெய்த பாவி நான். ஆத்திரத்தில், உத்தமி ஏன் வந்தாள். இதில் ஏதோ சூது இருக்க வேண்டும் என்று யோசிக்கவில்லை. வெறி! ஆவேசம்! பித்தம்! தலைகால் தெரியாத கோபம்! சொர்ணத்தின் கேலியால் ஏற்பட்ட வேதனை! நான் மிருகமானேன், பவானியின் உயிரைப் போக்கினேன்.
சொர்ணத்தை வஞ்சித்தேன். அவள் என்னைக் கொலைகாரனாக்கினாள்.
ஜெகவீரன், தன் தங்கை செத்ததற்குக் காரணம் தன் புரட்டு, நான் கொலைகாரனானதற்குக் காரணம் தன் வஞ்சகம் என்று எண்ணவில்லை. என்னை மேலும் கொடுமைக்கு ஆளாக்கினான்.
சேகர்! அந்தப் படம், நான் படுகொலை செய்தவன் என்பதை, சொந்த மனைவியைக் கொன்றவன் என்பதை, சுசீலாவின் தாயைக்கொன்றவன் என்பதை, உலகுக்குக் காட்டக்கூடிய படம், என்னைத் தூக்குமேடைக்கு அனுப்பக்கூடிய படம், எங்கெங்கு நான் மதிக்கப்படுகிறேனோ அங்கெல்லாம் என்னைப்பற்றிக் கேவலப்படுத்தக்கூடிய படம், சுசீலாவையே என்னை வெறுக்கும்படி செய்யக் கூடிய படம். என் மானத்தைப் போக்கக்கூடிய படம். குடும்ப கௌரவத்தைக் குலைக்கக்கூடிய படம். அவனிடம், அக்ரமத்தின் உருவமான அவனிடம் சிக்கிக்கொண்டதால், அவன் என்னைத் தன் இஷ்டப்படி ஆட்டிவைக்கிறான். நான் என்ன செய்வேன்? சுசீலாவிடம். மகளே! என்னை மன்னித்துவிடு! நான் உன் தாயைக் கொன்றுவிட்ட கொடியவன், என்று எப்படிக் கூறுவேன்.
"வீடு வாசலை எழுதிவை என் பேருக்கு- "ஜெகவீரன் கட்டளையிடுவான். “ஏன்?" என்று கேட்டால், “படம்” என்பான், பணிவதன்றி வேறு வழி இல்லை கடைசியில், சுசீலாவைப் பலி கேட்கிறான். அத்துடன் அவனுடைய பயங்கரப் பசி அடங்கித் தீரும்.
சுசீலா, பவானியின் மகள் - அவளும் தியாகம் செய்ய வேண்டியவளே ஒப்புக்கொண்டாள் என்னைக் காப்பாற்ற.