பக்கம்:ஓலைக் கிளி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19


அப்படியிருந்தும் தாமரை மலர் களவு போய்க் கொண்டேயிருந்தது. அந்த வீரர்களால் திருடனைத் தடை செய்யவோ, கண்டுபிடிக்கவோ முடியவில்லை.

ராணிக்கு மேலும் கோபம் பொங்கி எழுந்தது. அவள் அரசனிடத்திலே கோபமாகப் பேசினாள். அரசிளங்குமரர்கள் ஐந்து பேரையும் உடனே தன்னிடம் வரும்படி ஆணையிட்டாள். அவர்கள் எல்லோரும் ராணியின் கோபத்தைக் கண்டு சற்று பயத்தோடு அவளுக்கு முன்னால் வந்து நின்றார்கள்.

“நமது காவலாளிகளால் தாமரைப் பூவைத் திருடுகின்றவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் தந்தையால் இந்தக் காரியம் ஆகாமல் போய்விட்டது. அவர் செய்த முயற்சியெல்லாம் பலன் கொடுக்கவில்லை. அதனால் உங்களுக்கு நான் ஒரு உத்தரவு போடப்போகிறேன். அதன்படி நீங்கள் செய்தாக வேண்டும்” என்று ராணி பலத்த குரலில் சொன்னாள்.

அரசன் பேசாமல் மெளனமாக உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நாள்களாக அரசி தங்களிடத்திலே அன்பு காட்டாமல் கடுமையாக நடந்து வருவதை அரசகுமாரர்கள் அறிந்திருந்தார்கள். திடீரென்று தங்களுடைய அன்பான தாய் இப்படி மாறிவிட்டதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதனால் அவளிடத்தில் அதிகமாக நெருங்காமலேயே அரச குமாரர்கள் இருந்து வந்தார்கள்.

இப்பொழுது அவள் என்ன உத்தரவு போடப்போகிறாளோ என்று கவலையோடு நின்றார்கள்.

ராணி மூத்த குமாரனைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள். "இன்றைக்கு இரவிலே நீ குளத்தடியிலிருந்து காவல் புரிய வேண்டும். தாமரைப்பூவைத் திருடுகின்றவனைப் பிடித்துக்கொண்டு வரவும் வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் உன்னைப் பாதாளச் சிறையில் அடைப்பேன். அடுத்த நாளைக்கு இரண்டாவது ராஜகுமாரன் போகவேண்டும்” என்று அவள் கர்ஜனை செய்தாள். அரசன் வாய் பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/16&oldid=1027473" இலிருந்து மீள்விக்கப்பட்டது