பக்கம்:ஓலைக் கிளி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


மலையின் உச்சியிலுள்ள முருகன் கோயில் கண்ணுக்குத் தெரிந்தவுடனே கிளி, "விக்கிரமா, அதோ கோயில் தெரிகிறது. நீ அங்குப் போய்க் கொஞ்சம் இளைப்பாறு. நான் ஒரு நொடியில் வந்துவிடுகிறேன். பயப்படாதே” என்று சொல்லிவிட்டு வேகமாக அரண்மனைத்தோட்டத்தை நோக்கிப் பறந்தது.

விக்கிரமன் கோயிலுக்குச் சென்று முருகனை வணங்கி நின்றான். அதற்குள் கிளியும் திரும்பி வந்துவிட்டது. அது தாமரை மலரைப் பறித்து வந்திருந்தது. அந்தப் பூவை முருகனுடைய பாதத்தில் போட்டு வணங்கியது.

“இந்தப் பூவைப் பறித்துவிட்டாயா ?” என்று விக்கிரமன் கவலையோடு கேட்டான்.

“விக்கிரமா, கவலைப்படாதே. இனிமேல் அந்த மாயக்காரியைப் பற்றிப் பயம் வேண்டியதில்லை” என்று கிளி உற்சாகத்தோடு சொல்லிற்று.

"மாயக்காரியா ? அவள் என் தாயார் ராணியல்லவா ?” என்று விக்கிரமன் கேட்டான்.

"அவள் உன் தாய் அல்ல. அவள் ஒரு மாயக்காரி. நான்தான் உன்னுடைய தாய். என்னை இப்படி ஒரு கிளியாகச் செய்துவிட்டு அவள் என்னை போல வேஷம் போட்டுக்கொண்டு அரசரிடத்திலே நடிக்கிறாள். அரசரும் அவளிடத்திலே மயங்கிக் கிடக்கிறார்” என்று கிளி சொல்லிற்று.

விக்கிரமனுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது. இருந்தாலும் கிளி சொல்லுவதை முழுவதும் அவனால் நம்ப முடியவில்லை.

அவன் நம்பிக்கை கொள்ளாதிருப்பதைப் பார்த்துக் கிளி. “விக்கிரமா, என் கண்ணே, நான் சொல்லுவதில் உனக்கு நம்பிக்கையில்லையா? நான் உன்னைப் போல மனித பாஷையிலே பேசுவதைக் கேட்டாகிலும் நம்பிக்கை பிறக்கவில்லையா ?” என்று கேட்டது.

"பஞ்சவர்ணக் கிளியே, நீ என் தாயாராக இருந்தால் என் அண்ணன்மார்களைப் பாதாளச் சிறையில் அடைக்கும்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/22&oldid=1027479" இலிருந்து மீள்விக்கப்பட்டது