பக்கம்:ஓ மனிதா.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கீரி கேட்கிறது

107

திறமையென்றால் வெறும் திறமையல்ல; போர்த் திறமை!

நான் பாம்புடன் சண்டையிடும்போது, நீ என்னை கவனித்திருக்கிறாயா? முதலில் அதன் தலையைத்தான் நான் துண்டாக்க விரும்புவேன். அந்தத் தலையையும் அதற்கு முன்னால் சென்று கடித்துத் துண்டாக்க மாட்டேன். பின்னால் சென்று கடித்தே துண்டாக்குவேன். அதாவது, அதன் பிடரியைத்தான் கவ்விப் பிடித்து நான் சண்டையிடுவேனே தவிர, தொண்டையைக் கவ்விப் பிடித்துச் சண்டையிட மாட்டேன்.

இதுவே என் யுத்த தந்திரம். இந்தத் தந்திரத்தில் இருப்பது மகிமையல்ல, திறமையே!

இதைப் புரிந்து கொள்ளாமல் என்னிடம் ஏதோ அபூர்வ சக்தி இருப்பதாகவும், அந்தச் சக்தி இருப்பதால் பாம்பு கடித்தாலும் நான் இறப்பதில்லை என்றும் நீ சரடு விடுகிறாய்!

அப்படியே கடித்தாலும் குடு குடு வென்று ஓடிப் போய் எனக்கு மட்டுமே தெரிந்த ஓர் அற்புதப் பச்சிலையைத் தின்று அதை நான் அரைநொடியில் சரிப்படுத்திக் கொண்டு விடுகிறேன் என்று கரடி விடுகிறாய்!

இதெல்லாம் என்ன? ‘பொய்’யில் உனக்குள்ள மோகம் உண்மையில் ஏன் வரமாட்டேன் என்கிறது?

வந்தால் இந்த உலகம் வாழ்ந்து விடும் என்றா?

நடக்கட்டும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/108&oldid=1371294" இருந்து மீள்விக்கப்பட்டது