பக்கம்:ஓ மனிதா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகம் கேட்கிறது

127


ஆக, எல்லாக் கலைகளிலும் உள்ள ‘நுணுக்கம்’ இந்தக் கலையிலும் இருக்கிறது. அந்த நுணுக்கம் தெரிந்தவர்களே இதிலும் வெற்றிபெற முடிகிறது; அல்லாதவர்கள் தோல்வியையே தழுவ நேருகிறது.

மனிதா! ஒரு பாவமும் அறியாத என்னை இந்தக் ‘காக்கா பிடிக்கும் கலை’யில் சம்பந்தப்படுத்தியதோடு நீ நின்றாயா?—இல்லை; தெருவில் நீ அடித்துப் போடும் எலிகளையும், உன் காலடியில் சிக்கிச் செத்துக்கிடக்கும் தவளைகளையும் அப்புறப்படுத்தி நான் துப்புரவாக்கு கிறேன் என்பதற்காக நீ என்னை ‘ஆகாயத் தோட்டி’ என்ற ‘சிறப்புப் பெய’ரால் வேறு அழைத்துத் தொலைகிறாய்!

இதில் ‘தோட்டி’ என்னத்துக்கு, ‘தோட்டி?’ அதற்குப் பதிலாக ‘ஆகாயத் தொண்டன்’ என்றோ , ‘ஆகாய ஊழியன் என்றோ’ அழைத்தால் என்னவாம்?

எப்படி அழைப்பாய்? தொழிலுக்கு ஒரு ஜாதி, ஜாதிக்கு ஒரு தொழில்; என்று அந்த நாளிலேயே கண்டவனாயிற்றே நீ நாளது வரை ‘ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும், ஒழிக்கவேண்டும்’ என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் ‘சவரத் தொழிலாளி’ என்றும், ‘சலவைத் தொழிலாளி’ என்றும் ‘அரிஜன்’ என்றும் பழைய பெயர்களுக்குப் பதிலாகப் புதிய புதிய பெயர்களைச் சூட்டி, ஜாதிக்கு ஒரு தொழிலையும், தொழிலுக்கு ஒரு ஜாதியையும் ‘நவீன முறை’யில் வளர்த்து வருபவனாயிற்றே நீ!

இந்த நிலையில் தன் ஜாதிக்கு விரோதமாகச் சவரத் தொழிலை மேற்கொண்டு ‘தொழிலுக்கு ஒருஜாதியில்லை?’ என்பதை நிரூபிக்க உங்களிடையே உள்ள ஒரு முதலியாரோ, ஒரு நாயுடுவோ எங்கே முன் வரப் போகிறார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/128&oldid=1371401" இலிருந்து மீள்விக்கப்பட்டது